free website hit counter

மனிதர் உணர்ந்து கொள்ள...!

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு தாய் தோட்டத்தில் தன் குழந்தைக்கு அழகான மலர்களைக் காட்டி ரசித்துக் கொண்டிருப்பாள்,  அந்த அழகிய மலரின் செந்நிறம் திரையில் விரியும் போது எழும் பின்னணி இசையும் உயரும்.

அது ஒரு பெரும் அவலத்தின் நிறமும், ஒலியும் என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தெளிவாக உணர்ந்து கொள்ள, அந்தப் பின்னணி, இசையைக் கேட்டுக் கொண்டே படத்தை இறுதிவரை பார்க்க வேண்டும். 

The Zone of Interest  சென்ற ஆண்டு, 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில்  கிராண்ட் பிரிக்ஸ் விருது உட்பட வேறு சில விருதுகளும் வென்ற படம்.  அன்மையில் நடந்து முடிந்த ஆஸ்கர் 96வது அகாடமி விருது விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஒலி அமைப்பு என்பவற்றுக்கான விருதுகளை வென்றிருந்தது. சிறந்த ஒலியமைப்புக்கான விருதுக்கு மிகப் பொருத்தமான தேர்வு என்பதை படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே நாம் உணர்ந்துவிட முடியும். 

சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம். ஆனால் The Zone of Interest  ல் காட்சியையும், கதையின் கருவினையும் வெவ்வேறு தளங்களில் பயணிக்க வைத்திருப்பார் இயக்குனர் ஜோனதன் க்ளெசர். இந்த உத்திக்கு அவர் பின்னணி இசையினை நுட்பமாகப் பயன்படுத்தியிருப்பார். ஒரு பெரும் மனித அவலத்தைக் காட்சிகளில் காட்டாது, பின்னணி இசைவழி அதனை உணர வைத்தபடியே, இப் பெரும் அவலத்துக்கு கிஞ்சித்தும் இணக்கமில்லாத  நேரெதிரான அழகியற் காட்சிகளை திரையில் விரிப்பார்.
 
அந்த வீட்டிலும், வீட்டின் வெளிப்புறத்திலும், பிள்ளைகளும், பெரியோரும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.  பிள்ளைகள் விளையாடுவார்கள், நீச்சலடிப்பார்கள்,  பிறந்தநாள் கொண்டாடுவார்கள், பாடாசாலை செல்வார்கள். தாய் அழகான தோட்டம் அமைப்பாள் , பூச்செடிகள் வளர்பாள், விருந்தினருக்கு காட்டி மகிழ்வாள். இராணுவ அதிகாரியான தகப்பன் தன் சகாக்களுடன் சந்திப்புக்கள் நிகழ்த்துவார், பிள்ளைகளுடன் விளையாடுவார், ஆற்றில் குளிப்பார், “நீதான் இந்த வளாகத்தின் இராணி” எனச் சொல்லி மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவார்.  

அந்த வளாகத்தின் சுவருக்கு அப்பால், புகை போக்கிகளிலிருந்து எழும் கரும்புகை வானில் பரவும். இடையிடையே வெடிக்கும் துப்பாக்கிச் சத்தங்களும்,  அவலத்தைப் பிரதிபலிக்கும் ஒசையும் சன்னமாகவும், சில வேளைகளில் சற்று பலமாகவும் கேட்டவண்ணம் இருக்கும். ஆனால் இவை எதுவும் வளாகத்தின் இந்தப் பக்கத்தில் வாழ்பவர்களின் இயல்பினை, மகிழ்ச்சியைப் பாதிக்கவில்லை. அழகான அந்தச் சூழலில், இவர்கள் எல்லோருக்கும் வேண்டியவற்றை, சில பெண்கள் எதுவுமே பேசாது அமைதியாக, ஆனால் இயந்திர கதியில் இயங்கிச் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் படத்தின் கதை இருபதாம் நூற்றாண்டின் மனிதப் பேரவலம் ஒன்றினைப் பதிவு செய்து கொண்டிருந்தது. 

சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிப்படுகொலை முகாமான ஆஷ்விச்  வதைமுகாம் பொறுப்பதிகாரியாக இருந்த இராணுவ அதிகாரியான ருடோல்ஃப் குடும்பம் வாழ்ந்த வீட்டைச் சுற்றிக் காட்டியவாறே, அந்த வீட்டு வளாகச் சுவருக்கு அப்பால் நடக்கும் பயங்கரத்தை ஒலியின் வழியே உணர்த்துவார் படத்தின் இயக்குனர் ஜொனதன் க்ளேசர். 

படத்தின் இறுதிக் காட்சியில் , இப்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கும் அந்த வதைமுகாமைக் காட்டும் போது,  அங்கே நடந்திருக்கும் பயங்கரத்தை பார்வையாளர் ஒவ்வொருவரும் தங்கள் தன்மைக்கு ஏற்ப வலியோடும், கசப்போடும் உணர்ந்து கொள்ள முடியும். ஏன் இதை இவ்வாறு சொல்கின்றேன் என்றால், இப்படத்தின் கதையான வரலாற்றுச் சம்பவத்தில் இறந்தவர்கள் பல இலட்சம் யூதர்கள். அதன் பாதிப்பின்றி இயல்பாக வாழ்ந்தவர்கள் ஜேர்மனியர்கள். அடக்கப்பட்டு அமைதியாகப் பணியாற்றியவலர்கள் போலந்து நாட்டினர்.

இந்தப் படத்தினைப் பார்த்துக் கொண்டிருந்த போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. 2009  சித்திரைத் திருநாள், யாழ்ப்பாணத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்துப் பேசிக் கொண்டிருக்கும்போது, பட்டாசு வெடிச்சத்தம்  கேட்டது. நீண்டகாலத்தின் பின் பிள்ளைகள் வெடிகொழுத்திப் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்வதாகத் தெரிவிக்கப்பட்டது. அதே சமகாலத்தில் விழுத்து வெடிக்கும் ஷெல்குண்டுகளிலிருந்து தப்புவதற்காக வன்னி நிலப்பரப்பில் குழந்தைகள் வீறிட்டிடு அலறியபடியே பதுங்குமிடம் தேடி ஓடிக்கொண்டிருந்தார்கள். யாரையும் குற்றஞ்சாட்டுவதற்காக இதைச் சொல்லவில்லை. மாறாக மனிதம் மரத்துப் போவது , அல்லது மறந்து போவது மட்டுமல்ல, எவரும் அடுத்தவர் அவலங்களை  ஒருபோதும் உணர முடியாத அல்லது தவிர்த்துப்போகும் ஒரு அகச்சூழ்நிலை,  உருவாகிவருவதை அவதானிக்க முடிகிறது. 

கோவிட் பெருந்தொற்று நேரம் இந்த உலகில் மக்கள் மத்தியில் காணப்பட்ட ஒரு பொது மனநிலைக்கும், அதன் பின்னால் ஏற்பட்டிருக்கும் மனநிலைக்குமான மாற்றத்தினை, இதற்கான ஒரு எடுத்துக்காட்டாக நாம் நோக்கலாம். 

ஒரு காலத்தில் மக்களிடையே தொடர்பாடல் சுருங்கியிருந்தது. ஆனால் மக்கள் ஒருவருக்கொருவர் வேண்டப்பட்டவர்களாக இணக்கமாகி இருந்தார்கள். ஆனால் இன்று மக்களுக்கிடையிலான தொடர்பாடல் விரிந்திருக்கிறது, ஆனால் மனித விருப்புக்களும் சிந்தனைகளும் வேகமாச் சுருங்கி வருகின்றன. இதுவே  ஆஸ்கர் விருதினைப் பெற்ற இயக்குனர் ஜோனதன் க்ளோசர் தனது ஏற்புரையில் இன்றைய காசா - இஸ்ரேல் யுத்தத்தைச் சுட்டிப்பேசியதும், அதற்கான எதிர்வினைகளாகவும்  எழுந்து வருகின்றன.

The Zone of Interest  இப்போது ஐரோப்பியத் திரை அரங்குகளில் காட்சிப்படுத்தப்படுகிறது. மானுட நேசிப்பும்,  சிந்தனை விசாலம் மிக்கவர்களும்   பார்க்க வேண்டி படம். மற்றவர்கள் பார்த்தாலும்  புரியப் போவதில்லை  படத்தில் வரும் ருடோல்ஃப் குடும்பத்தினரைப் போல...

                                                                                                                 -4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction