மனிதனின் முகஉறுப்புக்களில் ஒரு வாய் இரு கண் இரு காது என இறைவன் படைத்தமைக்குக் காரணம், நிறையவே பார்த்து, நிறையவே கேட்டு, குறைவாகப் பேச வேண்டும் என்பதற்காகத்தான் என ஊர்ப்பெரியவர்கள் சொல்வார்கள்.
இதையே மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள் என சுய முன்னேற்றப் பேச்சாளர்கள் ஆலோசனையாகச் சொல்வார்கள். குடும்பத்திலும் சரி, பணியிடத்திலும் சரி, சமூகப் பொறுப்பிலும் சரி, இந்தப் பண்பு அவசியம் என்பதைச் சொல்கிறது சில தினங்களுக்கு முன்னர் வெளியான "சில நேரங்களில் சில மனிதர்கள்" திரைப்படம்.
தமிழின் முக்கியமான எழுத்தாளுமையான ஜெயகாந்தனின்முக்கியமான கதை ' சில நேரங்களில் சில மனிதர்கள் ' . மனித உணர்வுகளை சிறப்பாகப் பதிவு செய்து, புகழ்பெற்றிருந்த இந்தக் கதை திரைப்படமாக வந்திருந்தது. அந்தத் தலைப்பிற்கான அர்த்தப் பொருத்தமுடன், விஷால் வெங்கட் எழுதி இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ' சிலநேரங்களில் சில மனிதர்கள் ' .அந்தத் தலைப்பின் பெருமையை வீணடிக்காமல் ஒரு பதிய திரைவடிவத்தைத் தந்தமைக்காவே இந்த இளம் இயக்குனரைப் பாராட்டலாம்.
சில திரைப்படங்களும் சிறு குறிப்புக்களும்!
மனிதர்கள் உணர்ச்சி வயப்பட்டவர்கள். அகப் புறச் சூழலின் தன்மைக்கேற்ப மாறுபடும் உணர்ச்சிகளால் வழி நடத்தப்படுபவர்கள். அந்த வழிநடத்தலைச் செம்மயாக்குவது அறிவு. அறிவுக்கும் உணர்வுக்குமான போராட்டத்தில் பிறப்பது ஈகோ எனும் தற்சார்புத் தன்மை. அதனை ஆன்மீக நெறியில் 'நான்' எனும் ஆணவம் என்கிறார்கள். இந்த மாயை அழிந்தால் மீட்சி என்கிறது சமயநெறி. ஈகோ அழிந்தால் எல்லாமே சுலபம் என்கிறது வாழ்க்கை நெறி.
சில மனிதர்களுக்கிடையிலான, ஈகோ, பொறுப்பின்மை, மேதாவித்தனம், கோபம், எனப் பல்வகை உணர்வுகளை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்தத் திரைக்கதை, தனது கதையாகப் பார்வையாளனுக்குத் திரையில் தெரியும் வகையிலான நம்பகத் தன்மை மிகுந்த நெருக்கமான காட்சிகளாலும், பொருத்தமான கலைஞர்களாலும், உருவாகியிருக்கின்றது " சில நேரங்களில் சில மனிதர்கள்"
உணர்வுநிலைகளில் எழும் பிறழ்வுகளை, களைந்து விடவும், பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், வாழ்வின் முரண்களைக் களைந்து முன்னேறிச் செல்லவும், மற்றவர்கள் கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்பதும், செயல்களைப் பாரத்து ரசிப்பதும், மறத்தலும், மன்னிப்பும், வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்கையில் திரைப்படமாக அல்லாது வாழ்க்கைக்கான பாடமாக நிறைவு பெறுகிறது.
நாசர், அசோக் செல்வன், மணிகண்டன், கே.எஸ்ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அபி ஹாசன், ரித்விகா, ரியா, பிரவீன் பாலா, அஞ்சு சூரியன் ஆகியோர் நடிக்க , மணிகண்டன் வசனம் எழுதியிருக்கின்றார். ரிதனின் பின்னனி இசை அழகான கோர்வை.
திரையாக்கத்தில் சின்னச் சின்ன தவறுகள் இருந்தாலும், சமூகத்திற்கான முக்கியத்துவத்தை சொல்வதில் முழுமை பெறும் " சில நேரங்களில் சில மனிதர்கள் " அன்புடையர் என்றும் உரியர் பிறர்க்கு என்பதை, அழகான செய்தியாகச் சொல்கிறது. 2022 ஆரம்பத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக வந்திருக்கிறது ' சிலநேரங்களில் சில மனிதர்கள் '
- 4தமிழ்மீடியா விமர்சனக்குழு