free website hit counter

தபால் அனுப்பினால் பரிசு! : 'கிளாவுஸ்' திரைப்படம் சொல்லும் கதை

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தபால் போக்குவரத்து வெகுவாக குறைந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் தபால்த்துறையை மட்டுமே செய்திகளை பகிர நம்பியிருந்த அந்தகாலக் கட்டத்தை அடிப்படையாக கொண்டு "கிளாவுஸ்" அனிமேஷன் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் திரைப்படமாக வெளியான ஆங்கில மொழி ஸ்பானிஷ் அனிமேஷன் திரைப்படம் ''கிளாவுஸ்''; செர்ஜியோ பப்லோஸ் இயக்குனராக அறிமுகமாகி, அவரது நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

கல்லூரியில் மிக மோசமான மாணவராக நிரூபிக்கும் ஒரு தபால்காரனை அவனது தந்தை 'தண்ணி இல்லா' ஊருக்கு தபால் சேவை செய்ய அனுப்புகிறார். அந்த ஊரோ இரண்டுபட்டு கிடக்கும் காடாக இவனை பயமுறுத்துகிறது. அந்த ஊரில் எல்லை பிரித்து வசிக்கும் இரு பிரிவு மக்களுக்குள் மணி அடித்தால் வெட்டு குத்து சண்டை என காலகாலமாக தொடர்கிறது. எப்போதும் யாரையாவாது போட்டுத்தள்ளும் எண்ணத்தோடு வாழும் அந்த மக்களுக்குள் அகப்படும் தபால்காரனுக்கு ஒரு தபால் கூட அனுப்புவதற்கு யாரும் தயார் இல்லை. இதற்கிடையில் பள்ளிக்கூடம் எனும் பெயரில் இருக்கும் கட்டிடத்திற்குள் வகைவகையான மீன்களை தொங்கவிட்டு மீன் வியாபாரம் செய்யும் ஆசிரியையும் தபால்காரன் சந்திக்கிறான்.

இந்நிலையில் தற்செயலாக ஒரு வீட்டின் மாடியிலிருந்து சிறுமி ஒருத்தி வரைந்த கடதாசி இவன் முன்னே விழ அதை மடித்து தபால் உரைக்குள் வைத்து தன்பைக்குள் வைத்துக்கொள்கிறான். நாட்கள், மாதங்கள், செல்ல செல்ல ஒரு முன்னேற்றமும் இல்லாமல் சோர்வுறுகிறான். அப்போதுதான் அந்த ஊரின் எல்லைப்பகுதியில் தனிமையில் வசித்து வரும் மரப்பொம்மை செய்யும் 'கிளாவுஸ்" பற்றி அறிந்து காணச்செல்கிறான். பாழடைந்த இருண்ட வீட்டிற்குள் நுழையும் அவன் அங்கு யாரும் இல்லாததால் அச்சமடைந்த நேரம் கூரிய ஆயுதங்களுடன் 'கிளாவுஸ் வருவதை' கண்டு பயந்து ஓடுகிறான், அப்போது அவன் தவறவிட்ட தபால் பையிலிருந்த தபால் 'கிளாவுஸ்; கைகளுக்கு கிடைக்கிறது.

அதில் வரையப்பட்டிருக்கும் அச்சிறுமியின் ஓவியம்; 'கிளாவுஸை' ஒரு பரிசு செய்து அச்சிறுமிக்கு அனுப்ப தூண்டுகிறது. அதை அந்த தபால்காரன் மூலமாகவே அனுப்புகிறார். பரிசுப்பொம்மை பெற்று உற்சாமடையும் அச்சிறுமியால் அவ்வூர் முழுவதும் உள்ள சிறார்களுக்கு சேதி பரவுகிறது. தபால் அனுப்பினால் தங்களுக்கும் பரிசுப்பொருள் கிடைக்கும் என நம்பும் சிறார்கள் தபால் அனுப்ப முன்வருகிறார்கள்.

நாளாடைவில் தபால்களும் கூடி பரிசுப்பொருட்களும் பெற்ற சிறார்கள் வன்மம் மறந்து விளையாட ஒன்று கூடுகிறார்கள். முறையான கல்வி கிடைக்கவும் தபால்காரன் சிறார்களை பள்ளிக்கு செல்ல தூண்டுகிறான். இதனால் சிறார்கள் அனைவரும் திருந்தி ஊரையே பூங்காவனமாக மாற்றுகிறார்கள்; இவர்களை தடுக்க முயலும் ஊர்மக்களும் பின்னர் சமாதானமாக ஒன்று சேருகிறார்கள்; ஆனால் இந்த ஒற்றுமையை எதிர்க்கும் ஊர் தலைவர்களால் "கிளாவுஸ்"க்கும் தபால்காரனுக்கும் ஆபத்து விளைகிறது. இதிலிருந்து தப்பித்து எவ்வாறு நத்தார் தினத்திற்கான சிறப்பு பரிசுகளையும் ஊரையும் மீட்கிறார்கள் என்பதே மீதிக்கதை. ஆக்கபூர்வமான சிந்தனையும் தன்னம்பிக்கையும் இருந்தால் தீயதை கூட நல்லதாக மாற்றும் படைப்பாற்றல் ஓங்கிவரும் என்பதையும் இத்திரைப்படம் வெளிப்படுத்தியிருக்கிறது.

வெள்ளை வெள்ளையாக பனி உரையும் காலநிலையில் பண்டைய கால மக்கள் எவ்வாறு வாழ்ந்திருப்பார்கள் என இப்படத்தின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  நெலிந்து வளைந்த சித்திரங்களாக உருவங்களும் வீடுகளும் காண்பிக்கப்பட்டாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்களை சொல்கிறது. ஒரு கட்டத்தில் 'கிளாவுஸ்' கையிறு ஒன்றினை திரித்து தூக்கு முடிச்சு இட்டு தபால்காரனிடம் நீட்ட அவன் அது தனக்குதான் என கழுத்தில் மாட்டுகிறான். ஆனால் கழுத்திலிருந்து வாங்கும் 'கிளாவுஸ்; அதினுள் சிறுமரக்கூட்டை மாட்டி மரக்கிளையில் உயரே தொங்கவிடுகிறான். அதனுள் பனிக்கு கரையும் சின்னப்பறவைகள் இருப்பிடம் கொள்கின்றன.

கிளாவுஸ் எனும் நாத்தார் தாத்தாவை வேறு ஒரு தொனியில் காண்பித்திருப்பதும் படத்தின் புது அனுபவம்தான்.

நத்தார் விடுமுறையையில் நெட்பிளிக்ஸ்சில் பார்க்கவேண்டிய திரைப்படங்களில் இத்திரைப்படமும் ஒன்று. சிறந்த அனிமேஷன் படத்திற்கான பாஃப்டா (BAFTA ) விருது பெற்றிருக்கும் 'கிளாவுஸ்' படம் மிகையில்லா 2டி காட்சி அமைப்புக்களும் பொருத்தமான நிறங்களின் சேர்வையிலும் கண்ணுக்கும் மனதிற்கும் நத்தார் தின பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction