free website hit counter

சார்பட்டா பரம்பரை: விமர்சனம்

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் சினிமாவில் குத்துச் சண்டையை கதைக் கருவாகக் கொண்ட படங்கள் சமீப காலத்தில் அதிகரித்திருகிறது என்றே சொல்லலாம். அவற்றில் சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதி சுற்று’, மீனவ சமுதாயத்திலிருந்து மீண்டெழும் ஒரு குத்துச் சண்டை வீராங்கனையின் வெற்றிக் கதையைப் பேசி, ஒரு கற்பனையை முன்வைத்த விளையாட்டுப் படமாக கமர்ஷியல் படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது.

இன்னொரு பக்கம் வடசென்னைக்கே உரிய குத்துச் சண்டையைக் கதை பின்னணியை மையமாக வைத்து, ஜெயம் ரவியின் கடும் உழைப்பில் உருவான படம் ‘பூலோகம்’. கார்ப்பரேட் மாபியா மீடியாக்களின் கையில் சிக்கும் ஒரு கலையின் நிலையைப் படம் பிடித்துக் காட்டிய வழக்கமான வில்லன் - ஹீரோ யுத்தமாகச் சுருங்கிப் போனது இந்தப் படம். இதிலிருந்து ‘சார்பட்டா பரம்பரை’ எப்படி வேறுபடுகிறது என்பதுதான் விஷயமே?

இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்தபோது, தனது ஆட்சியதிகாரத்துக்கு மாபெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக கருதிக் கொண்டு வரப்பட்டது ‘எமர்ஜென்சி’ சட்டம். அது எதிர் அரசியலாளர்கள் அனைவரையும் ஒடுக்கி சிறையில் தள்ளியது. ஊடகங்களின் குரல்வளைக்கு கட்டுப்போடப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் வடசென்னையில் இரண்டு குத்து சண்டை குழுக்களுக்கு இடையே நடக்கும் மானப் பிரச்சனையாக வரலாற்றின் ஒரு இழையை மட்டும் எடுத்துக்கொண்டு தன்னுடைய கற்பனையைக் கலந்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

ஹிட்லர் எப்படி திரைப்பட ஊடகத்தை தனக்கான பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்தினாரோ அப்படித்தான் ஒடுக்கப்பட்ட மக்களே எதிலும் எங்கும் இருப்பவர்களாக தன்னுடைய படைப்புகளில் திரித்துக் காட்டி வருவதில் கெட்டிக்காரராக இருக்கிறார் ரஞ்சித். ‘சார்ப்பட்டா பரம்பரை’யில் அவருடைய இந்த அஜண்டா நன்றாகவே வெளிப்பட்டுள்ளது. எமர்ஜென்சி காலத்தில் ஆட்சியை இழந்ததுடன் அதிக கைதுகள் சிறை உள்ளிட்ட நெருக்கடிகளை சந்தித்தை மறுப்பதற்கில்லை. ஆனால், அதன்பின் ஆட்சிக்கு வந்த அதிமுகவும் அதன் தலைவரான எம்.ஜி.ஆரும் வடசென்னையின் குத்துச் சண்டை கலை வளர்க்க செய்த பங்களிப்புகள் முற்றாக ‘சார்பட்ட பரம்பரை’யில் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதைவிடக் கொடூரம் வடசென்னையின் குத்துச் சண்டை பாரம்பரியத்தில் வீரர்களாகவும் பயிற்சி வாத்தியார்களாகவும் இருந்தவர்களில் முதலிடம் மீனவர்களாகிய பர்வத குல மக்கள்தான். அவர்களுக்கு அடுத்த நிலையில் வன்னியர்கள், நாயக்கர்கள் (ஆந்திரப் பூர்வீகம் கொண்ட நாய்க்கர் அல்லது நாயக்கர்), பட்டியலினத்தார், சாணார் அல்லது நாடார்கள், செட்டியார்கள், மதம்மாறிய இஸ்லாமியர், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோர் அடங்குவர். ஆனால், ரஞ்சித் கையாண்டிருக்கும் சார்பட்டா பரம்பரையின் கதைக் களமானது வரலாற்றை (திமுக கட்சிக்கொடி, கட்சிக் கரை வேட்டி, எம்.ஜி.ஆர்.கருணாநிதி புகைப்படங்கள், புத்தர் அம்பேத்கர் உருவங்கள் என அப்படியே கற்பனையின்றி வைத்திருக்கிறார்) அப்படியே எடுத்தாள முயற்சித்திருக்கும்போது, வீரர்களும் வாத்தியார்களும் பட்டியலின தலித்துகளாகவே சித்தரித்திருப்பது என்னவகையான படைப்பு நேர்மை?

இயக்குநரின் திட்டமிட்ட ஒருசார்பு ஒருபெரும் குறையாக இருந்தாலும், ஒரு கலைப் படைப்பாகவும் வணிக சினிமாவாகவும் ஒரேநேரத்தில் இரட்டைத் தன்மையுடன் ‘சார்பட்டா பரம்பரை’ எவ்வாறு உயர்ந்த திரைப்படமாக மாறி நிற்கிறது என்பதற்கு அதன் திரைக்கதை, கதாபாத்திர எழுத்து, வசனங்கள், காலகட்டத்தை முன்னிறுத்திய கலை இயக்கம், நட்சத்திர தேர்வு, நடிகர்கள் கதாபாத்திரங்களுக்காக கொடுத்த நடிப்பு, குத்துச் சண்டையை இதுவரையிலான ஐரோப்பிய படங்களிலிருந்து மிக அணுக்கமாக, அதன் அடிமுறைத் தொழில்நுட்பம் வெளிப்படும்படி படம்பிடித்துக்காட்டிய ஒளிப்பதிவு என அத்தனை கலைத்துறைகளும் அபாரமாக வெளிப்பட்டுள்ளதே காரணம் எனலாம்.

‘குத்துச்சண்டை மீது வாஞ்சை கொண்ட ஒரு எளிய இளைஞன், தான் சார்ந்திருக்கும் பரம்பரையின் பெருமையைக் காக்க ஏந்திக்கொள்ளும் சவால்’என்பது இன்றைய தமிழ் சினிமாவில் மாஸ் கதாநாயகனுக்கான ஒருவரிக் கதையே. அதில் அவனை கதாபாத்திரமாக மட்டுமே துலங்கச் செய்த வகையில் இயக்குநர் ரஞ்சித்துக்கு ஒரு சல்யூட்! குறிப்பாக கபிலனை தமிழ் வணிக சினிமாவின் எந்த ஹீரோயிச பிம்பத்துக்குள்ளும் நுழைக்காமல் அம்மாவிடம் துடைப்பக்கட்டை அடியும் மனைவியின் கட்டளைக்கு கீழ்படியும் சாமானியனாகவும் அதேபோல் குடிக்கு அடிமையானபின் தொப்பையுடன் தன்னுடைய உடற்கட்டு மற்றும் தோற்றச் செல்வாக்கை இழக்கும் கதாநாயகனாகவும் ஒரு மாஸ் கதாநாயகனைக் காட்டியிருப்பதற்கு ரஞ்சித்தையும் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்ற ஆர்யாவையும் கொண்டாடியே தீரவேண்டும்.

ஒரு படைப்பாளியாக துணைக் கதாபாத்திரங்களை முழுமைப்படுத்தியதில் ரஞ்சித்தும் அவருடன் திரைக்கதையை இணைந்து எழுதிய தமிழ்ப்பிரபாவும் 100 விழுக்காடு வெற்றிபெற்றிருக்கிறார்கள், படத்தில் அனைத்து தரப்பினரையும் ஈர்த்த ஒரு கதாபாத்திரம் டான்சிங் ரோஸ். ரங்கன் வாத்தியார், அவரது மகன், டான்சிங் ரோஸ், ராமன், அவரது தாய்மாமன், வேம்புலி, மாரியம்மா, கபிலனின் தாய், ஆங்கிலோ இந்திய டாடி, பீடி ராயப்பன் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்கள் திரைக்கதையின் நகர்வில் முக்கியமான பங்காற்றுவதுடன் அவை தமக்குரிய முழுமையைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக ‘டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் அபூர்வங்களுள் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ரங்கன் வாத்தியார் தனது மாணவன் கபிலனிடம் டான்சிங் ரோஸ் பற்றிச் சொல்லும்போது: “வேம்புலியயே அடிக்குற அளவுக்கு உன்கிட்ட ஆட்டம் இருக்கலாம்! ஆனா அதுக்காகலாம் ரோஸ அடிச்சுற முடியாது! மெட்ராஸ்ல இருக்க பாக்ஸிங் பரம்பரைலயே ரோஸுக்கிட்ட இருக்க கால்பாடம் வேற எவன்கிட்டயும் கிடையாது! ஸ்டைலா டேன்ஸ் ஆடுற போலயே இருக்கும் அதுனால தான் அவன் பேரு டேன்சிங் ரோஸு! எதிரணி ஜனங்களுக்கே அவந்தான் ஜெயிக்கனும்கிற எண்ணத்தக் குடுத்துருவான்! அந்த அளவுக்குப் பெரிய வித்தக்காரன் பா அவன்!” என்கிறார். இந்த வசனத்தில் அந்தத் துணைக் கதாபாத்திரத்தின் மொத்த சித்திரமுமே நம் மனதில் வந்து உட்கார்ந்து விடுகிறது. அத்துடன் டான்சிங் ரோஸாக வரும் ஷபீரின் நடிப்பு அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே உயிருள்ள ஒன்றாக மாற்றிக் காட்டிவிடுகிறது. இப்படித்தான் ஒவ்வொரு துணைக் கதாபாத்திரத்தின் சித்தரமும் வசனங்கள் வழியாக முழுமையாக படத்தில் எழுந்து வருகிறது.

மிக மிக நுணுக்கமாக கதாபாத்திரச் சித்தரிப்பும் வடசென்னையின் வட்டாரப் பேச்சு மொழியும் பிரமிக்க வைக்கும் அளவுக்கான யாதர்த்துடன் படத்தில் கையாளப்பட்டுள்ளது. குத்துச்சண்டைக்கே உரித்தான ரிங், ரிங் ஃபைட், ஜதை , ஸ்பேரிங் போன்ற வார்த்தைகள் சரளமாக புழங்குகின்றன. அரசியல் உள்நோக்கத்துடன், வரலாற்றை ஒருசார்பாக கையாண்டபோதும் சார்பட்டாவின் மண்மனம், செய்நேர்த்தி ஆகியவற்றால் தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கிய பதிவாகிவிட்டது.

- 4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction