free website hit counter

கர்ணன் - விமர்சனம்

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் தமிழகத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கர்ண’னும் அதை இயக்கியிருக்கும் மாரி செல்வாராஜ்களும் தமிழ்நாட்டுக்கு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

தன்னுடைய முதல் படைப்பான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில், ஆணவக் கொலைக்கு ஆளாகவிருந்த கதையின் நாயகன் பரியன், அதிலிருந்து தப்பித்து, தன்னை கொலை செய்ய வந்தவனையும் கொலை செய்யச் சொன்னவனையும் மன்னித்து, கல்வியைப் பெற்று உயர்வதே அவர்களுக்கான தண்டனையாகவும் தனக்கான சாதிய விடுதலையாகவும் இருக்கும் என்ற முடிவுக்கு வருகிறான். ஆனால், ‘கர்ணன்’ படத்தின் நாயகன், தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் வந்தடைய வேண்டிய கல்வியும் வேலை வாய்ப்பும் ஆதிக்க சாதி மனோபவத்தின் வன்மத்தால் நொறுக்கப்படுவதற்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருக்கிறான்.

1995-ல் ஆகஸ்டில் தமிழக வரலாற்றில் கொடியங்குளம் என்கிற தலித் கிராமம் போலீஸாரால் சூரையாடப்பட்டது பெரும் கரும்புள்ளி. தேவர் - தலித் ஆகிய இரு சமூகங்களுக்கு இடையே மூண்டு, இரண்டுமாதம் நீடித்து, இரு தரப்பிலும் பல உயிர்களைப் பலிவாங்கிய அந்தச் சாதிக் கலவரம், தமிழ் சினிமாவில் இதுவரை எடுத்தாளப்படவில்லை. அதைத்தான் ‘கர்ணன்’ படத்தில் பொடியங்குளம் ஆக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

1997-ல் 24 ஆண்டுகளுக்கு முன், அந்த கிராமத்தில் கதை நடக்கிறது. பேருந்தில் ஏறி, நகரத்துக்கும் கல்லூரிக்கும் பள்ளிகளுக்கும் செல்ல வேண்டும் என்றால் பொடியங்குளத்து மக்கள், ஆதிக்க சாதியினர் வசிக்கும் பக்கத்து ஊரான மேலூருக்குத்தான் செல்லவேண்டியிருக்கிறது. தலித்துகள் மட்டுமே வாழும் அந்த கற்பனை கிராமத்தில், கருவேல முள் கட்டைகளை வெட்டி, மூட்டம் போட்டு, அடுப்புக்கறியாக விற்கும் குடும்பத்தின் ஆண் பிள்ளைதான் கர்ணன் (தனுஷ்). மேலூருக்குச் செல்லும் பேருந்துகள் பொடியங்குளத்தை தாண்டித்தான் செல்லவேண்டும் என்றாலும் அந்த கிராமத்தில் நிற்காமல் செல்கின்றன. இதனால், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மட்டுமல்ல, அவசர மருத்துவ உதவி தேவைப்படுகிறவர்கள், முதியவர்கள் என அனைவரும் இந்த நவீனத் தீண்டாமையால் அல்லாடுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனை செல்ல தனது கணவன் மற்றும் 10 வயது மகனுடன் பேருந்துக்காகக் காத்திருக்கிறார். அம்மா வலியில் துடிக்க, அதைப் பார்த்து பொறுக்கமுடியாமல், நிறுத்தாமல் செல்லும் பேருந்தின் மீது அந்தச் சிறுவன் கல்லெறிகிறான். அந்த சமயத்தில் அங்கே வரும் கர்ணன், தனது நண்பர்களுடன் அந்தப் பேருந்தை அடித்து நொறுக்குகிறான். இந்தச் சம்பவத்தை விசாரிக்க பொடியங்குளம் கிராமத்துக்கு வரும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த உயர் காவல் அதிகாரியால் அசம்பாவிதம் நிகழ்கிறது. அதன்பிறகு, கர்ணனை தங்களுடைய ரட்சகனாக நினைக்கும் பொடியங்குளம் கிராம மக்களுக்கும் அந்த அதிகாரியின் பின்னால் அணிவகுக்கும் அதிகார வார்க்கத்துக்குமான போர் தொடங்குகிறது. அதில் ‘கர்ணன்’ என்ன செய்தான்? புறக்கணிக்கப்படும் அந்த கிராமத்துக்கு நண்மைகள் கிடைத்தா என்பது மீதிக் கதை.

உண்மைச் சம்பவத்துடன் கற்பனையைக் கலந்து திரைக்கதை எழுதப்படும்போது, கதாபாத்திரங்கள், துணைக் கதாபாத்திரங்கள் ஆகியவற்றை எழுதுவதில் கச்சிதமும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான இணக்கம் மற்றும் முரண்களையும் நம்பகமாக அமைக்க வேண்டியது மிக மிக அவசியம். அதில் (கதாநாயகி ரெஜிஷா விஜயன் கதாபாத்திரம் தவிர) மாரி செல்வராஜ் அட்டகாசம் செய்திருக்கிறார். உதாரணத்துக்கு கர்ணனுக்கும் எமராஜாவுக்கும் (மலையாள லால்) இடையிலான உறவையும் நட்பையும் வரையறுத்ததைக் கூறலாம். கர்ணனாக தனுஷ், எமராஜாவாக லால் இருவரில் யாருடைய நடிப்பு சிறந்தமுறையில் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்று கேட்டால், அறுதியிட்டுக் கூறுவது கடினம்! அந்த அளவுக்கு லால் எமராஜாவாக வாழ்ந்திருக்கிறார். தலையில்லாத ஓவியம் லாலின் தியாகத்தால் முழுமையடையும்போது, அது அந்த கதாபாத்திரத்துக்கும் லாலின் நடிப்புக்குமான விருதாக மாறிவிடுகிறது. தமிழ் சினிமாவில் துணை வில்லனாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் லாலை மாரி செல்வராஜ் முற்று முழுவதுமாக கௌரவம் செய்திருக்கிறார்.

ரெஜிஷா தனக்குக் கிடைத்த இடத்தில் முடிந்தவரை நடித்திருக்கிறார் என்றாலும் எல்லா படங்களிலும் வந்துபோகிற வழக்கமான கதாநாயகியாக பின் தங்கிவிடுகிறது அவருடைய கதாபாத்திரம். அதேநேரம் துணைக் கதாபாத்திரங்களாக வரும் கர்ணனின் அக்காள் (லட்சுமி பிரியா), கர்ணனின் அம்மாவாக நடித்திருப்பவர், எமராஜாவின் காதலியாக நடித்திருக்கும் பெண்மணி, ரெஜிஷாவின் தோழியாக வரும் கௌரி கிஷன் ஆகியோர் தந்து செல்லும் உணர்வழுத்தமும், சாதிய வன்மத்தில் நொறுங்கும் பெண் மனதுகளின் வலி, ஆண்களை விட அதிகமானது என்பதற்கும் சாட்சிகளாகி நிற்கின்றன. இந்தத் துணைக் கதாபாத்திரங்களில் நிறைவாக பங்களித்திருப்பவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

திரைக்கதை மற்றும் திரைமொழியைப் பொறுத்தவரை, நாட்டர் தெய்வத்துக்கும் தலித்துகளுக்குமான உறவை வனப்பேச்சி எனும் குறியீட்டு அரூபக் கதாபாத்திரம் வழியாக படத்தில் முழு வலிமையுடன் கையாண்டிருக்கிறார் இயக்குநர். அதேநேரம், தலித் விடுதலை அரசியலைப் பேசுவதற்கு மகாபாரதக் கதாபாத்திரங்களின் பெயர்களை களைத்துப்போட்டு பயன்படுத்துகொண்டிருக்கும் விதமும் தலித்துகள் சூடிக்கொண்ட பெயர்களே ஆதிக்க சாதியினரை எந்த அளவுக்கு எரிச்சலூட்டும் என்பதை சித்தரித்த விதமும் பார்வையாளர்களின் மனதில் தலித்துகளின் வலியை ஆழமாக உணர வைத்துவிடுகின்றன.

திரையிசை என்பதை வெறும் பொழுதுபோக்கு அம்சமாகக் கையாளும் தமிழ் சினிமாவில், கதையின் உணர்வைத் தூக்கிப்பிடிக்க உதவும் கலையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் மாரி செல்வாராஜ். அவ்வகையில் சந்தோஷ் நாராயணனின் இசை, புதிய தலைமுறை இயக்குநர்களிடம் மட்டுமே கதைக்கான இசையாக வெளிப்பட்டு நிற்பதை ‘கர்ண’னிலும் கேட்டும் கண்டும் உணர்வெழுற்சி கொள்ளமுடிகிறது.

கதை நிகழும் நிலபரப்பை தனது ஒளிப்பதிவுகளின் வழியாக கதாபாத்திரம் ஆக்கித்தரும் தேனீ ஈஸ்வர், இதிலும் அந்த வித்தையை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

படத்தில் நிறைய நிறைகள் இருந்தாலும் கதை நாயகனை ஒடுக்கப்பட்டவர்களின் மத்தியிலிருந்து திமிறியெழும் ரட்சகனாகச் சித்தரித்தாலும் சினிமாவுக்கான ‘ஹீரோயிசமாக’த் தெரியாதபடி மாரி செல்வராஜால் மாற்ற முடியவில்லை. கழுதையை, கழுகினை, யானையை, பன்றியை, நாய்களை பொருத்தப்பட்டுடன் திரைக்கதையில் உள்நுழைத்த இயக்குநர், குதிரைக்கான பின்னணியை அழுத்தமாக உருவாக்காமல் வலிந்து திணித்திருப்பதில் தனுஷுக்கான ஹீரோயிசம் பல் இளிக்கிறது. காவல் துறையில், அதன் ஆதிக்க சாதி அதிகாரிகளின் சாதிய வன்மம் தமிழ்நாட்டில் இன்னும் குரூரமாக தொடர்ந்து வரும் ஒன்றுதான் என்றாலும் இதில் கண்ணபிரான் என்கிற அதிகாரியின் சாதி வன்மத்தை நம்பகமாக நிறுவிக்காட்ட இயக்குநர் தவறிவிடுவதும் இடறுகிறது.

இத்தகைய குறைகளையெல்லாம் கடந்து ஒரு அசலான தலித் சினிமாவாக கம்பீரம் காட்டுகிறான் இந்தக் ‘கர்ணன்’.

 -4தமிழ்மீடியா விமர்சனக் குழு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction