இன்றைக்கும் உலக அளவில் உறுதியுடன் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அரசுகளை எதிர்த்துப் போராடுவதில் கம்யூனிஸ்டுகளுக்கு இணை கம்யூனிஸ்டுகளே!
அவர்களுடைய போராட்ட முறை உலக அளவில் பரிசோதிக்கப்பட்டவை. காலந்தோறும் நிகழ்ந்து வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, கம்யூணிஸ்டுகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்; எந்த இடத்திலும் எங்கும் தேங்கி நின்றுவிடக் கூடாது என்பதை ‘ஹீரோயிச’த்துடன் சொல்லியிருக்கிறது விஜய்சேதுபதி - ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் லாபம். இந்தப் படத்தின் 70 விழுக்காடு படப்பிடிப்பை அதன் இயக்குநர் தோழர் எஸ்.பி.ஜனநாதன் முடித்திருந்த நிலையில், எஞ்சிய படத்தை அவருடைய உதவியாளர்கள் பூர்த்தி செய்து வெளியிட்டுள்ளனர். இயக்குனரின் மறைவு, இந்தப் படத்தை ஒரு கதாநாயகனின் படமாக மாறிவிட்டது. கதாநாயகனாக நடித்துள்ள விஜய்சேதுபதி இந்தப் படத்தை தயாரித்துள்ளதால், இதை பொதுவுடமை மற்றும் ‘லாபம்’ என்பதன் அடிப்படையைப் பேசும் ஹீரோயிசப் படமாக மாறிவிட்டது. இதனால் சொல்ல வந்த செய்தி காத்திரமாக இல்லாமல். படத்தின் பெரும்பகுதி சிறுபிள்ளை விளையாட்டாக மாறிவிட்டது.
ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’நாவலைப் போல ஒவ்வொருவரும் குறிப்பாக விவசாய சங்கத் தலைவர்கள் எப்படி இன்றைய கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்டத்தில் போராட வேண்டும் என்ற முன் மொழிவை, ஸ்ருதி ஹாசனின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் முன் வைக்கிறது. கார்பரேட் கொள்ளையர்களுக்கு எதிராக கூட்டுப் பண்ணை விவசாயத்தை வற்புறுத்தும் படத்தில், கூட்டு விவசாயப் பண்ணையை உருவாக்கும் விதமும் விஜய்சேதுபதியின் முன்கதையும் கிச்சுகிச்சு மூட்டுகின்றன.
'லாபம்' திரைப்பட ட்ரைலர்
ஒரே நல்ல விஷயம், கூட்டுப் பண்ணைக்கு சூட்டப்பட்ட பெயர் தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் வரலாறு அறிந்தவர்களை பெரிதும் கிளர்ச்சியுற வைக்கும். தஞ்சை கூலி உயர்வுப் போராட்டத்தில் புகழ்மிக்க கம்யூனிஸ்ட் தலைவர் பி.எஸ் சீனிவாச ராவ் பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், கதாநாயகனோ முதலாளியை ட்ராக்ட் போன்ற கணரக ஜே.சி.பி இயந்திரத்தால் கழுவேற்றம் செய்து கொல்கிறார்.
உலக வரலாற்றை மாற்றி எழுதவேண்டிய கட்டயத்தை உருவாக்கிய பேரறிஞ்சர் காரல் மார்க்ஸ் பல்லாண்டுகள் உழைத்து உருவாக்கிய மூலதனம் என்னும் நூல். சுரண்டலிலிருந்து கிடைக்கும் ‘உபரி’யை ‘லாபம்’ என்று விஞ்ஞானப் பூர்ரவமாக விளக்குகிறார். இதை லாபம் என்ற பெயரில் மிகவும் எளிமையாக பள்ளிக் குழந்தைகளிடம் கதாநாயகன் வழியாக விளக்கி விடுகிறார் இயக்குநர் தோழர், அமரர் எஸ்.பி. ஜனநாதன். இதை ஜனநாதனைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு எளிமையாக விளக்கியிருக்க முடியாது.
உலக கார்ப்பரேட்டுகளிடம் விலைபோன இந்தியாவில், விவசாயிகள், தெருவில் இறங்கி கடந்த ஓராண்டாக போராடிவரும் இந்தக் காலகட்டத்தில், ‘லாபம்’ போன்ற படங்கள் உருவாவது காலத்தின் கட்டாயம்தான் என்றாலும் இதை கதாநாயகனின் படமாக மாற்றியிருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. என்றாலும் ஜனநாதன் உருவாக்கிய பல காட்சிகள் படத்துக்கு பெரும் பலமாக இருக்கின்றன. ஆறு ஆண்டுகளுக்குப் பின் சொந்த கிராமத்துக்கு வரும் பக்கிரிசாமி என்கிற விஜய்சேதுபதியை மக்கள் வரவேற்க, முதலாளிகள் கொல்லத் துரத்துகிறார்கள். இது ஏன் என்று சொல்லத் தேவையில்லை. மக்களுக்கானவர்களை முதலாளிகள் வெறுப்பது ஒன்றும் புதிதில்லையே! அப்படிப்பட்ட விஜய் சேதுபதி வெளியூர்களுக்குச் சென்று தான் பெற்ற நவீனங்களையும், தொழில் யுக்திகளையும் வைத்து எப்படித் தன் மக்களுக்கும், அப்படியே நாட்டு மக்களுக்கான நமக்கும் உழவுக்கும், தொழிலுக்கும் உள்ள வித்தியாசங்களையும், விவசாயத்தை அடிப்படையாக வைத்தே உலகத் தொழில்கள் இயங்குவதையும் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார் ஜனநாதன்.
பொதுமேடையில் கண்ணீர் சிந்திய விஜய் சேதுபதி!
எடுத்துக்காட்டாக கரும்பு என்றால் அது சர்க்கரை ஆலைகளுக்கானது என்று மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அதிலிருந்து பெறப்படும் மொலாசிஸ் போன்ற உபரிப் பொருள்கள் சர்க்கரையை விட அதிக லாபம் தரக்கூடிய மதிப்புக் கூட்டபட்ட பொருட்களுக்கான தொழில்களை இயக்குகின்றன. ஆனால், சர்க்கரையை முன் நிறுத்தியே கரும்புக்கான விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. அதேபோல பருத்தி விவசாயிகள் நினைத்தால் உலக ஆயத்த ஆடை உற்பத்தியையே தடுமாறச் செய்ய முடியும் என்று விளக்குகிறார் ஜனநாதன்.
மேலும் விவசாயியின் உழைப்பு பற்றியும், அதற்குத் தரவேண்டிய ஊதியம் பற்றியும் முதலாளித்துவம் கருத்தே கொள்ளவில்லை என்பதையும் வலியுறுத்தும் அவர், விளை பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடிய தகுதி விவசாயிகளுக்கே இருப்பதையும் முன்வைக்கிறார். அத்துடன் முதலாளிகளின் லாபம் என்பது பகல் கொள்ளை என்றே நெற்றிப் பொட்டில் அடிப்பது போலச் சொல்கிறார் அவர். அதுதான் படத்தின் அடிநாதம். அது படத்தில் சங்கநாதமாக ஒலித்தாலும் இரண்டாம் பாதிப் படம் முழுவதும் சிறுபிள்ளை விளையாட்டாக முடிந்துவிடுவதில் திரையரங்குகளில் படத்துக்கு ‘லாபம்’ கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான்!
- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு