கேள்வி கேட்பது என்பது அதிகாரத்தின் குரல் அல்ல அது அறிவின் மொழி. மக்கள் அறிவாக இருப்பது அதிகாரத்துக்குப் பிடிக்காது, அதனால் கேள்விகேட்பவர்களை அதிகாரங்கள் விரும்புவதில்லை என விஜய்சேதுபதி சொல்ல, Rotterdam Cinerama1 அரங்கம் நிறைந்திருந்த அத்தனை கரங்களும் தட்டி ஒலியெழுப்பின.
இயக்குனர் வெற்றி மாறனின் இயக்கத்தில், நடிகர்கள் சூரி விஜய்சேதுபதி நடித்த விடுதலை பட 2ம் பாகத்தின் முதல் திரையிடல், 1ம் 2ம் பாகம் இணைந்த காட்சியாக, றொட்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் 31.01.2024 புதன்கிழமை மாலை திரையிடப்பெற்றது. அரங்கு நிறைந்திருந்த பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்தின் மத்தியில், காட்சி அறிமுகத்திற்காக அரங்கத்திற்கு கலைஞர்களை அழைத்த போது, இயக்குனர் வெற்றி மாறனும், நடிகர் சூரியும், வேட்டியில் வந்திருந்தார்கள். கூடவே வெண்ணிற ஆடையில் விஜய்சேதுபதியும் வந்தார்.
'விடுதலை -1' ல், இருந்த பாடல், மற்றும் சில பகுதிகளைச் சுருக்கி, 2ம் பாகத்தினையும் இணைத்து 4 மணிநேரப் படமாக, இத்திரைப்படவிழாவிற்கான சிறப்புப் பதிப்பாகத் தருவதாகவும், இந்த நீளமான தமிழ்படம், தமிழ்தெரியாத பார்வையாளர்களை எவ்வாறு ஈர்க்குமா? என அஞ்சுவாதாக அறிமுகத்தில் இயக்குனர் குறிப்பிட்டார். ஆனால் படம் ஐந்து மணிநேரமாக இருந்தாலும் கூட அயராது பார்ப்பதற்கு அனைத்துப் பார்வையாளர்களும் தயாராகவே இருந்தனர். ஏனென்றால், 'விடுதலை' பேசியது உலக அதிகாரத்திற்கு எதிரான அரசியல்.
இடைவேளை வரையும், ஏற்கனவே பார்த்த முதற்பாகம் என்பதால், அதன் காட்சிகள் நினைவில் கடந்து சென்றன.இடைவேளையின் பின்னதாக வரும் இர்ண்டாம் பாகம், எம்மை வேறோர் களத்துக்கு மெல்ல நகர்த்திச் செல்கிறது. நம்மவர்கள் பலரும் அறிந்த கதைதான். ஆனால் அதனுள்ளே அறியாத பல அரசியற் சூழ்ச்சிகள், அதற்குப் பலியாக்கப்படும் அப்பாவி மனிதர்களின் துயர்கதைகள் தொடருகின்றன.
ஒரு பூகோள அரசியலைப் புரியும்படியாகக் கதைசொல்லிப் படமெடுக்கலாம் என்பதை, வரிக்கு வரி, கனதியாக வரும் வசனங்களால், கைதட்டல்களை வாங்கிய வண்ணமே நேர்கோடாக நகர்ந்து செல்லும் திரைக்கதை. அதில் இயல்பாக வாழ்ந்திருக்கும் விஜய்சேதுபதி, அப்பாவித்தனமான பாவனையால், கச்சிதமாக ஒட்டிக் கொள்ளும் சூரி, ஆகியோரின் நடிப்பு. மற்றைய கதாபாத்திரங்களும் கற்பனைப் பாத்திரங்கள் இல்லை எனத் தோன்றச் செய்யும் கச்சிதமான பாத்திரத் தேர்வு. அதிலும் தலைமைச் செயலாகவரும் ராஜீவ் மேனனின் மென்குரலிலும், அசைவிலும், சொல்லித் தெரிய வைக்கும் நுன்னரசியல், இராமானுஜன், ஹனிபா, எனும் பெயர்களைத் தவிர்த்து, அமுதனைத் தெரிவு செய்வதில் காட்டும் பெயர் அரசியல், எனப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறார் வெற்றிமாறன்.
அந்த மலைப்பிதேசத்திலும், அடர்ந்த காடுகளிலும், மலைக்கிராமங்களிலும், அங்கிங்கு நாம் அலைந்திடாதபடி, கதையோடு பிணைத்துக் கைபிடித்து நம்மை அழைத்துச் செல்கிறன வேல்ராஜின் ஒளிப்பதிவும், இசைஞானியின் இசையும்.
இரண்டாம் பாகத்தின் இறுதிப்பகுதி பேசுவது 2009ல் எங்கள் பகுதிப் பூகோள, பிராந்திய அரசியல் என்பதாகத் தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள். ஆனால் உலகெங்கும் ஏகாதிபத்திய வர்க்கம் செய்யும் அதிகார அரசியல் இதுவென்பதால், உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்படும் மக்கள், விடுதலை விரும்பும் மக்கள் அனைவரும், இதனைத் தங்களின் கதையாக உணர்ந்து கொள்வார்கள் என்பது நிஜம்.
காட்சியின் நிறைவில் கலந்து கொண்டவர்கள் பலரின் கருத்தும், எமது கருத்தும் மட்டுமன்றி, எம்மோடு பேசிய மாற்றுமொழியினரும் இந்தக் கருத்தினை ஆதரித்துப் பேசியதில் மட்டுமன்றி, இந்த நிலை மாற்றத்துக்கு, பரஸ்பர மரியாதை, பாசம், பணிவு என்பனவே உதவும் என்பதை கதையின் சம்பவங்களால் பார்வையாளர்களிடத்தில் பகிர்ந்து, இயக்குனராக வெற்றி காண்கின்றார் வெற்றி மாறான்.
- றொட்டடாமிலிருந்து 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்