சுவிற்சர்லாந்தில் 75வது லொகார்னோ சர்வதேசதிரைப்படவிழா, கோவிட் பெருந் தொற்றின் பின்னதாக, வழமையான பொலிவைப் பெற்றிருக்கிறது.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னதாக உலக நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற சூழலில் பல்லாயிரக்க கணக்கான மக்கள் கலந்துகொள்ளும், ஆயிரக்கணக்கானவர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புத் தேவைப்படும், இத்தகைய பெரும் விழாக்களைச் சிறப்புற நடத்துவது என்பதே பெருஞ் சவாலான விடயம். ஆனாலும் லொகார்னோவில் அது சாத்தியமாகிறது. எப்படி ?..... உழைப்பு , ஆரவாரமற்ற அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு அதனைச் சாத்தியமாக்கிறது எனலாம். அதிலும் ஆயிரக்கணக்கான இளையவர்கள் தொண்டுப் பணியாளர்களாக இணைந்திருந்து ஆற்றும் பணி அற்புதமானது. உதாரணத்துக்கு இரு சம்பவங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
பத்திரிகையாளர் காட்சி ஒன்றுக்காக காத்திருந்தபோது "அங்கிள் எப்பிடி இருக்கீங்க...? " எனும் தமிழ் குரல் என் கவனத்தைக் கலைத்தது. சுமார் பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து இந்த விழாவிற்கு பத்திரிகையாளனாகச் சென்று வருகையில் சந்தித்த தமிழ்மக்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படியான இடத்தில் அந்த தமிழ்குரல் என் கவனம் திருப்பியதில் வியப்பில்லை. குரலுக்குச் சொந்தக்காரியான அந்தச் சிறு பெண் என்னருகே வந்தாள். என் பிள்ளைகளின் வகுப்புத் தோழியான அவளை நீண்ட நாட்களின் பின் நேரில் சந்திக்கின்றேன். வழமையான விசாரிப்புக்கள் முடிந்ததும், திரைப்படவிழா குறித்துப் பேசுகையில், விழாவிற்கு பல நாடுகளிலிருந்தும் வரும் படைப்பாளர்களை, உரிய அரங்குகளுக்கு, குறித்த நேரத்தில் அழைத்துச் செல்லும் குழுவில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருப்பதைத் தெரிவித்தாள். படித்துப் பட்டம் பெற்ற பின், லொகார்னோ பகுதியில் உள்ள உயர்கல்விக் கூடத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றும் அவள், திரைப்படவிழாவில் தொண்டுப் பணியாளராக இணைந்து கொண்டு செயற்படுவது தெரிந்தது. திரைப்படங்கள் மீதான ஆர்வம் அவளை இப்பணியில் ஈடுபடுத்தியிருக்கலாம் என எண்ணியபோது, " இந்தத் திரைப்பட விழா நாட்கள் இந்த நகரையே மாற்றிவிடும். மகிழ்ச்சியின் உச்சம் தொடும் மனிதர்களின் கூட்டம் நிறைந்திருக்கும். அது எனக்குப் பிடிப்பதனால், அதில் நானும் ஒரு அங்கமானேன்.." என்றாள். தன் எண்ண உணர்வுகளைத் தமிழில் அவள் அழகாக வெளிப்படுத்திய அவள் விருந்தினர்களுடன் சரளமாக நான்கு மொழிகளில் உரையாடுவதையும் காண முடிந்தது.
இந்த எண்ணமும் உணர்வும் அங்குள்ள பல இளைஞர்கள் மத்தியில் இருப்பதை உணர்த்தியது மற்றுமொரு சம்பவம். ஒரு மாலை நேரம், திரையரங்கு ஒன்றின் சூழலில் அமைந்துள்ள இளைப்பாறும் இடத்தில், நண்பர்களுடன் கோப்பி குடித்து விட்டுப் பேசிக் கொண்டிருக்கையில், எங்களருகே வந்த இளைஞன், மேசையில் இருந்த வெற்றுக் கோப்பைகளை கவனமாக உரிய இடங்களில் கழிவுகளாகச் சேகரித்துச் சென்றான். அவன் அணிந்திருந்த மேலங்கியில், சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்றின் இலட்சினை தெரிந்தது. பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடும் அந்த நகரம் எப்போதும் துடைத்து வைத்தது போல் தூய்மையாக இருப்பதற்கு இவ்வாறான இளைஞர்கள், அவர்கள் சார்ந்த பொது நல அமைப்புக்களும் காரணமாகின்றன.
இவ்வாறான பல தனிநபர்களதும், அமைப்புக்களினதும், அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினால், இத் திரைப்படவிழாவின் போது, லொகார்னோ நகரமே திருவிழாக் கோலம் கொண்டிருக்கிறது எனச் சொன்னால் அது மிகையல்ல. இந்த விழாவிற்கு வருடந் தவறாமல் போகின்றீர்களே, என்ன பயன் என என்னிடம் கேட்பவர்கள் பலர்.
பியாற்சா கிரான்டே எனும் பெருமுற்றத்தில், பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளும் சூழ இருக்க, லாகோ மயோரே எனும் மலை ஏரி தழுவி வரும் இதமான மென்காற்றிணைந்த மாலைப் பொழுதின் மந்தகாசத்தில், உலகின் சிறந்த திரைப்படைப்பாளர்களின் திரைச்சித்திரத்தை காண்பது ஒரு பேரனுபவம். ஆனால் அது மட்டுமல்ல அந்த விழாவின் பெருமை. அது பல சிறப்பான அனுபவங்களின் தொகுப்பு என்பதை உணர்ந்தவர்கள் பலர் சங்கமிக்கும் திரைத்திருவிழா. அங்கே கூடுபவர்கள் வெறுமனே படங்களை மட்டும் பார்த்து ரசிக்கும் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல.
- 4தமிழ்மீடியாவிற்காக லொகார்னோவிலிருந்து: மலைநாடான்.
லொகார்னோ - 74ன் சிறப்புக் காட்சிகளின் கானொளித் தொகுப்பு.