லோகார்னோ78 திரைப்படவிழா நேற்று ஆரம்பமாகியது. இத் திரைப்படவிழாவின் சிறப்பம்சமான 'பியாற்சா கிரான்டே' பெருமுற்றத்தில், சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வு, சுருக்கமான, அதேவேளை காத்திரமான கருத்துக்களடங்கிய உரைகளுடன் தொடங்கியது.
"சமகாலத்தில், காசாவின் மீதான சகிக்க முடியாத தாக்குதல்களையும், அழிவுகளையும், பாலஸ்தீன மக்களைப் பாதிக்கும் கொடூரமான மனிதாபிமான துயரத்தையும், திட்டமிட்ட பசியையும், பட்டினி, வன்முறையையும் கண்டிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது," என்று லோகார்னோ திரைப்பட விழாவின் கலை இயக்குனர் ஜியோனா ஏ. நசாரோ(Giona A. Nazzaro), தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது குறிப்பிட்டார். அவரது அந்த உரைக்கு பெருமுற்றம் தனது ஆதரவினை பலமான கரவொலிகளாள் வெளிப்படுத்தியது.
லோகார்னோ திரைப்பட விழாவின் தலைவர் மாயா ஹாஃப்மேன்(Maja Hoffmann), விழாவிற்கான தனது அறிமுகத்தில், "78வது லோகார்னோ திரைப்பட விழா ஒரு லட்சிய மற்றும் உற்சாகமான பதிப்பாக இருக்கும் . 2025 ஆம் ஆண்டில், எங்கள் தொலைநோக்கு சிந்தனைத் திட்டம் தனித்துவமான உலகங்களையும் கண்ணோட்டங்களையும் இணைக்கும் பாலமாகத் தொடரும், மேலும் காட்சிப்படுத்தப்படும் சமகால திரைப்படத் தயாரிப்பு மற்றும் புரட்சிகரமான கதைசொல்லல் ஆகிய, முழு படைப்பாற்றல் மலர்ச்சியில், பியாற்ஸா கிராண்டே மீண்டும் உணர்ச்சிகள் பகிரப்படும் இடமாக மாற்றப்படும். ஒரு கொண்டாட்டத்திலும் மேலாக, லோகார்னோ78 சினிமாவை ஒரு உயிருள்ள, வளர்ந்து வரும் கலை வடிவமாகப் பாதுகாப்பது எங்கள் நோக்கமாகும்" எனக் குறிப்பிட்டிருந்ததை, அரங்கிலும் சுருக்கமான துவக்கஉரையில், தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
தலைவர் மாயா ஹாஃப்மேன்(Maja Hoffmann) அவர்களின் அந்தக் கூற்றினை மெய்பிப்பது போல் அமைந்தது, பெருந்திரையில் விழாவின் தொடக்கப்படமாக அமைந்த 'Le Pays d'Arto'(ஆர்தோவின் நிலத்தில்).ஆர்மேனிய பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பான இந்தப்படம் குறித்து, விரிவான பார்வையினை (தனியாக) காணலாம்.
நேற்றைய தொடக்கவிழாவில், ஈரானில் பிறந்த நடிகை கோல்ஷிஃப்தே ஃபராஹானி, டேவிட் காம்பாரி சிறப்பு விருதினைப் பெற்றார்.இந்த விருதினை வழங்க, சக ஈரானிய நடிகை ஜார் அமீர் அழைக்கபட்டமை, ஃபராஹானி மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒன்றாகக் கொடுத்தன. விருதினைப் பெற்றுக் கொண்ட ஃபராஹானி, இந்த பரிசு உங்களுக்கும், நம் அனைவருக்குமமானதென, லோகார்னோ பியாற்சா கிரான்டே பெருமுற்ற இரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிபொங்கக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் இன்னும் கலை மற்றும் கலாச்சாரத்தை நம்புகிறோம். நாங்கள் எல்லையின் எந்தப் பக்கத்தில் வாழ்ந்தாலும், எந்த கடவுளை நம்பினாலும், எங்கு பிரார்த்தனை செய்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அன்பு, கோபம், பொறாமை ஆகியவற்றை உணர்கிறோம். உலகம் முழுவதிலுமிருந்து, மனிதநேயம் ஒன்று சேரும் இடம் இதுதான். அதை இங்கு லோகார்னாவில் காண்கின்றேன். இந்த இருண்ட உலகில் இவ்வளவு பெரிய ஒளியாக இருப்பதற்கு நன்றி. கலை மூலம், கலாச்சாரம் மூலம் இந்த உலகத்தை மாற்றுவோம். அதனை நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செய்வோம்.” என்றார்.
லோகார்னோ சர்வதேசத் திரைப்படவிழாவிற்கான தனித்துவத்தை, இந்த ஆண்டின் தொடக்கநாளிலும், தெரிவாகியிருக்கும் திரைப்படங்களிலும், காண முடிகிறது. கடந்து சென்ற சில ஆண்டுகளில் குறைந்து போன நம்பிக்கையை, இந்த ஆண்டில் மீளக் கட்மைத்திருக்கின்றார்கள் விழாக்குழுவினர் என்றே எண்ணத் தோன்றுகின்றது. பார்க்கலாம்.....
- 4தமிழ்மீடியாவிற்காக: லோகார்னோவிலிருந்து மலைநாடான்
- படங்கள் நன்றி:Locarno Film Festival / Ti-Press