free website hit counter

நம்பிக்கை தரும் புதுமுகம் அவிநாஷ் !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரொட்டடாம் சர்வதேச திரைப்பட விழாவில் நம்மை வியப்பில் ஆழ்த்திய, விரும்பிச் சந்தித்த புதுமுகம் அவிநாஷ் பிரகாஷ். Bright Future பிரிவில் திரையிடப்பட்ட புதிய தமிழ்த்திரைப்படமான 'நாங்கள்' படத்தின் இயக்குனர்.

திரைப்படவிழாவில் தொடர்பாடல்களைக் கவனித்துக் கொண்டிருந்த நண்பர் ஶ்ரீநிவாசன் முதல்நாளில் அவினாஷை அறிமுகம் செய்திருக்காவிட்டால், "நாங்கள்" படத்தைப் பார்த்தபின் ஒரு அறுபது வயதிற்கு மேலான ஒரு முகத்தை இயக்குனராகத் தேடியிருப்பேன். 

நான்கு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும்  திரையில் காட்சிகளாக விரியும் திரைக்கதை "நாங்கள் ". இவ்வளவு நீண்ட நேரப் படங்கள், பார்வையாளர்களின் பொறுமையைச் சோதித்து விடும். ஆனால்  அவ்வாறில்லாது இக்கதையுடன் ஒன்றித்து இருக்கமுடிகிறது.  தந்தையுடன் வசிக்கும் மூன்று சிறுவர்கள், அவர்களது குடும்ப உறவுகளைச் சுற்றி விரியும் ஒரு குடும்பக்கதைதான். ஆனால் அதில் உறைந்திருக்கும் உணர்வுகளைச் சரமாகத் தொடுத்ததிலும்,  கதாபாத்திரங்களைக் கட்டமைத்ததிலும், அழகாகக் காட்சிப்படுத்தியதிலும், கதையின் நீளத்தை பார்வையாளர் மனதில் மறைத்து விடுகின்றார் இயக்குனர்.

1990 ம்  ஆண்டில் பிறந்த ஒரு இளைஞன், திரைக்கதை எழுதி, இயக்கி, அதனைக் கச்சிதமாகத் தொகுத்து,  ஒரு உணர்வலைகள் நிரம்பிய படமாகத் தந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. இந்தப் பக்குவத்தை அவரது சினிமாப் பட்டயக் கல்வி மட்டும் நிச்சயம் தந்துவிட முடியாது என நாம் எண்ணும்போதே, இக்கதையினை என் சொந்த அனுபவங்களின் வழி படமாக்கினேன் என்கிறார். தன்னுடைய அனுபவமாக இருந்தாலும், அதனைத் தரமாகத் தருவதற்கு உதவியிருக்கிறது அவரது சினிமா அறிவும் அதன் மீதான காதலும். அது திரைக்காட்சியின் பின்னரான கேள்வி பதில் நேரத்தில் அறிந்துகொள்ளவும் முடிகிறது.

இந்தப்படத்தினைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை முதலில் ஏற்படுத்தியது  இந்தப் படத்தின் விளம்பர வடிவமைப்பு.  அதில் தெரிந்த கலை நயம், படம் முழுவதிலும் அழகான காட்சிகளாக விரவிக்கிடக்கிறது. ஆனால் இந்தக் கதையினை இரண்டு மணிநேரத்துக்குள் சொல்லியிருக்கவும் முடியும். ஆனால் தன் எண்ணங்களையெல்லாம் காட்சிகளாக்கி கோர்த்திருக்கிறார் அவிநாஷ். அவரது அழகிய காட்சிப்படுத்தலும், முறையான கோப்பும், தரமான படமாக " நாங்கள் ' உருவாகியிருக்கிறது. படத்தின் நகர்வினைத் தொய்வின்றி நகர்த்திச் செல்வதில், முக்கிய பாத்திரங்களான அந்த மூன்று சிறுவர்களுக்கும் பெரும் பங்குண்டு.  அவர்களை இயல்பாக இயங்கவைத்துச் சிறப்பாகப் படமாக்கியிருப்பதில் நம்பிக்கை தரும் புதுமுகமாகமாக நமக்குத் தெரிகிறார் இயக்குனர் அவிநாஷ் பிரகாஷ்.

- 4தமிழ்மீடியாவிகாக: மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction