மகிழ் மன்றம் மற்றும் டம்மீஸ் ட்ராமா வழங்க ஶ்ரீவத்சன் நடித்து இயக்கிய “விநோதய சித்தம்” மேடை நாடகம் நேற்று (5-11-2021) நாரத கான சபாவில் நடைபெற்றது. நாடகம் அரங்கேறிய மேடையில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கண்டிப்பாக வேறு மேடை ஏற உள்ளேன். அரசியல் மேடை இல்லை. மும்பையில் சசிகபூர் அவர்கள் பிரித்வி தியேட்டர் என ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். அது போல் ஒன்றை இங்கு அமைக்க ஆசைப்படுகிறேன். இந்த நாடகத்தை பொறுத்த வரையில் நிறைய சொல்ல வேண்டும். எனது உத்தம வில்லனில் ஒரு பாடல் வரும் சாகாவரம் போல் சோகம் உண்டோ என்ற பாடல் அந்த பாடலின் மேம்பட்ட வடிவமாகத் தான் இந்த நாடகம் உள்ளது.
மரணத்துடனான அழகான உரையாடலாக இந்த நாடகம் அமைந்துள்ளது. இந்த உரையாடலை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நம் அனைவருக்குமான தேதி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. வீடு கட்டும் போது கழிவறை பற்றி சிந்திக்க மாட்டோம். வாழ்கைக்கு இருக்கும் மரியாதை மரணத்திற்கு தரப்பட வேண்டும், அதை இந்த நாடகம் செய்துள்ளது. என்னுடைய பிறந்தநாள் சிறப்பாக இதை அரங்கேற்றியதாக கூறியதற்கு நன்றி. நாம் அனைவரும் உணர வேண்டிய உண்மையை அழகாக மென்மையாக எடுத்துரைக்கிறது இந்த நாடகம். இந்த நாடகத்தை அரங்கேற்றுவதும், அதில் நான் கலந்து கொள்வதும் மகிழ்ச்சி. இதில் கலந்து கொண்டவர் ஒத்திகைக்கு போகவில்லை என்றால் நாடகத்தை நிறுத்தி விடுவார்கள் என்று சொன்னார், ஒத்திகை நாம் அந்த படைப்புக்கு தரும் மரியாதை. ஒத்திகையை நம்பும் வாத்தியார் எனக்கு கிடைத்தார். அதனால் அதன் அருமை எனக்கு தெரியும்.
நான் இயக்கும் படத்தை எத்தனை முறை பார்ப்பீர்கள் என்று கேட்டார்கள். ஒரு முறை நிஜத்தில் எண்ணிப் பார்த்தேன், நிஜமாகவே 100, 150 முறை பார்ப்பேன். டப்பிங், ரெக்கார்டிங் என மீண்டும் மீண்டும் புசித்து, சாப்பிட்டுவிட்டு தான் உங்களுக்கு தருவேன். நீங்கள் வெற்றி பெற வைப்பதற்கு பார்ப்பதை விட அதிக முறை நான் பார்ப்பேன். இங்கு இந்த நாடகத்தில் விமர்சனம் என்பதே இல்லை, அத்தனை பேரும் அருமையாக செய்துள்ளார்கள். நடித்தவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் இணையத்தில் பார்க்க முடிகிற காலத்தில் இங்கு நேரில் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
சமீபத்தில் சமுத்திரகனி இயக்கத்தில் ZEE5 ஒடிடி தளத்தில் வெளியான “விநோதய சித்தம்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.