சென்னையின் உண்மையான் அடையாளம் என்பது ‘கருப்பர் நகரம்’ என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட வடசென்னைதான்.
அங்கேதான் வெள்ளைக்காரர்களுக்காக துணி துவைக்கும் வண்ணாரப்பேட்டையும் அவர்களுக்காக மீன் பிடிக்கும் காசி மேடும், அவர்களுக்காக தோலாடைகள் செய்த பெரியமேடும் அவர்களுக்காக தூய்மைப் பணியை மேற்கொண்ட கலாசித் தொழிலாளர்கள் வசித்த ராயபுரம் இருக்கின்றன. ‘கருப்பர் நகரம்’ என்று வெள்ளையர்கள் சொன்னாலும் அவர்களுக்காக பள்ளிகள், மருத்துவமனை, தானியக் கூடம் தொடங்கி அத்தனை வசதிகளையும் செய்துகொடுத்திருந்தனர். அது மட்டுமா, தங்களுக்கு மிகவும் பிடித்தமான குதிரையேற்றம், மோட்டார் கார் ஓட்டும் பயிற்சி, குத்துச் சண்டை, கிரிக்கெட் ஆகியவற்றையும் அவர்கள் கருப்பர் நகர மக்களுக்கு கடத்தினார்கள். வடசென்னையின் இந்த வரலாற்றை, பா.ரஞ்சித் எனும் இயக்குநர் வரும்வரை தமிழ் சினிமா கண்டுகொண்டதே இல்லை.
தன்னுடைய அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களில் வடசென்னையின் உண்மையான முகத்தை காட்டிய பா.இரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து வடசென்னையின் ஒரு நூறு ஆண்டுகால குத்துச் சண்டைப் பின்னணியை மையமாக வைத்து அவர் இயக்கியிருக்கும் படம்தான் ‘சார்பட்டா பரம்பரை’. வடசென்னையில் இன்றைக்கும் இயங்கிவரும் குத்துச் சாண்டை குழுக்கள், அது சார்ந்து இயங்கும் நிழலுலகம், வாக்கு அரசியல் ஆகியவற்றுடன் கலந்து தலைமறைவு இயக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.
இன்றைக்கும் பலர் இந்தப் போட்டிகளில் பணத்துக்காக கலந்துகொண்டு உயிரை விட்டு வருகிறார்கள். இந்த அண்டர்கிரவுண்ட் குத்துச்சண்டை மேடையை ஆக்ரோஷமாக ஆக்கிரமித்து வெற்றிக்கொடி நாட்டிய எண்ணற்ற வீரர்கள் இங்கே வாங்கு மறைந்திருக்கிறார்கள். இந்தக் குழுக்கள் பற்றி ஏற்கெனவே ஜெயம்ரவி நடிப்பில் ‘பூலோகம்’ என்ற படம் வெளிவந்திருந்தாலும் வரும் ஜூலை 22 ஓடிடியில் வெளியாகும் ‘சார்பட்டா பரம்பரை ஆர்யாவுக்கும் பா.ரஞ்சித்துக்கும் அடுத்த நகர்வாக இருக்கும் என்பதை எந்த சந்தேகமும் இல்லை.
இதற்கிடையில் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார் பா.ரஞ்சித். இந்தமுறை ஒரு காதல் கதையை கையில் எடுத்திருக்கிறார். தன்னுடைய படங்களில் காதலை ஆழமாகச் சித்தரிக்கும் ரஞ்சித்.. முழுக்க முழுக்க காதல் கதை எனும்போது பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிப்பது வியப்பில்லை. ‘சார்ப்பட்டா பரம்பரை’ இணையத்தில் வெளியாகும் அதேநாளில் தனது புதிய படத்தின் படப்பிடிப்பையும் தொடங்குகிறார்.‘நட்சத்திரம் நகர்கிறது’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதிலிருந்தே படத்தின் அழகு புரிகிறது அல்லவா? அவருக்கு நம்முடைய வாழ்த்துகள்.
-4தமிழ்மீடியாவுக்காக:மாதுமை