கடந்தவாரம் இந்திய அளவில் பேசப்பட்ட ஒரு செய்தி ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கானின் கைது விவகாரம்.
இன்று அவர் மீதான ஜாமீன் மனு விசாரனைக்கு வரவிருக்கும் நிலையில் பாலிவுட்டின் கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்குச் சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாரூக் கானின் மகன் 23 வயது ஆர்யன் கான்உள்ளிட்ட 8 பேரைப் பிடித்து விசாரித்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு, மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரையும் என்சிபி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த விவகாரம் பாலிவுட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆர்யன் கான் கைதால் தனது படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தையும் ஒத்திவைத்துள்ளார் ஷாரூக் கான். தற்போது ஆர்யன் கானுக்கு ஆதரவாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ஹிருத்திக் ரோஷன். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"என் இனிய ஆர்யன், வாழ்க்கை என்னும் சவாரி வினோதமானது. அது நிச்சயமற்றது என்பதால்தான் சிறந்ததாக இருக்கிறது. நம்மிடம் அது பிரச்சினைகளை வீசுவதால்தான் உயர்ந்ததாக இருக்கிறது. ஆனால், கடவுள் கனிவானவர். வலிமையானவர்களுக்குத்தான் கடுமையான சிக்கல்களைத் தருவார். இந்தக் குழப்பத்துக்கு நடுவில் நீ உன் சுயத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டிய அழுத்தத்தை உணரும்போது, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை உணரலாம். அதை நீ இப்போது உணர்வாய் என்று எனக்குத் தெரியும். கோபம், குழப்பம், இயலாமை, ஆ.. உனக்குள் இருக்கும் நாயகனை வெளியே கொண்டுவரத் தேவையான விஷயங்கள் இவையே. ஆனால், அந்த விஷயங்கள் உனக்குள் இருக்கும் இரக்கம், கருணை, அன்பு ஆகிய நல்லவற்றையும் கூட எரித்துவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இரு. போதுமான அளவு உனக்குள் கொழுந்து எரியட்டும். உன் அனுபவத்தில் கிடைக்கும் விஷயங்களில் எதை வைத்துக்கொள்ள வேண்டும், எதைத் தூக்கியெறிய வேண்டும் என்று உனக்குத் தெரிந்தால் தவறுகள், தோல்விகள், வெற்றிகள் எல்லாம் ஒன்றுதான் என்பதும் உனக்குப் புரியும். ஆனால், இவற்றோடு உன்னால் நன்றாக முதிர்ச்சியடைய முடியும் என்பதைத் தெரிந்துகொள். உன்னைச் சிறுவனாகவும், வளர்ந்த ஆண் பிள்ளையாகவும் எனக்குத் தெரியும். உன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு நீதான் பொறுப்பு என்று அவற்றை ஏற்றுக்கொள். எல்லா அனுபவங்களையும் ஏற்றுக்கொள். அவைதான் உனக்கான பரிசுகள். ஒரு கட்டத்தில் எல்லாம் உனக்குப் புரியும்போது இவற்றின் அர்த்தமும் உனக்குப் புரியும். அனைத்தையும் நன்றாகக் கவனி. இந்தத் தருணங்கள்தான் உன்னை உருவாக்கும். உனக்கான சிறப்பான காலம் காத்திருக்கிறது. ஆனால், அந்த வெளிச்சத்துக்கு முன்னால் நீ இருட்டைக் கடந்தாக வேண்டும். அமைதியாக இரு. அனைத்தையும் ஏற்றுக்கொள். வெளிச்சத்தை நம்பு. உனக்குள் இருக்கும் வெளிச்சத்தையும்". இவ்வாறு ஹிருத்திக் ரோஷன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    