தரமான திரைப்படைப்புகள், படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை கவுரவிக்கும் உலகம் கொண்டாடும் உயரிய விருதுகளில் ஆஸ்கர் விருது முக்கியமானது.
இவ்விருது வழங்கும் விழா வரும் மார்ச் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் உலகின் பல்வேறு நாடுகள் ஒவ்வொரு வருடமும் போட்டிபோட்டு வருகின்றன
அந்த வகையில் இந்தியாவிலிருந்தும் ஆண்டுதோறும் ஒரு படம் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 14 இந்தியப் படங்களை தேர்வு செய்த தேர்வுக் குழுவினர் அந்தப் பட்டியலில் யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா, விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வினோத் இயக்கிய கூழாங்கல் திரைப்படம், மலையாள மொழியில் வெளியான நாயாட்டு, ஹிந்தி மொழிப்படங்களான ஷெர்னி, சர்தார் உதாம் சிங் ஆகிய இரு படங்கள், பிரிட்ஜ் என்ற அசாமிமொழித் திரைப்படம் உட்பட 14 திரைப்படங்கள் போட்டியிட்டன.
இந்த 14 படங்களையும் பார்த்து இறுதியில் ஒரு ஆஸ்கர் பரிந்துரைப் படத்தை தேர்வு செய்வதற்கான 15 ஜூரிக்கள் குழுவை பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் இயக்குனர் ஷாஜி என்.காருண் தலைமையில் அமைக்கப்பட்டது. அவர்கள் போட்டிக்கு வந்த 14 படங்களில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கிய ‘கூழாங்கல்' திரைப்படத்தை தேர்வு செய்துள்ளனர். தற்போது கூழாங்கல் திரைப்படம் சிறந்த இந்திய திரைப்படமாக ஆஸ்கருக்குச் செல்கிறது. பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா அரசு சாராத ஒரு சுதந்திரமான அமைப்பு ஆகும். வினோத் இயக்கியுள்ள கூலாங்கல் திரைப்படம் வறுமை, குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை கிராமியத் தமிழ்நாட்டின் வாழ்வியல் பின்னணியில் பேசுகிறது.