இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உதவியாளராக பணிபுரிந்தவர், ஏ.ஆர்.ரஹ்மான் இசை உட்பட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் 60-க்கும் அதிகமான பாடல்களையும் எழுதியவர் கவிஞர் தேன்மொழி.
நீலகிரியை சேர்ந்த இவர், குறிஞ்சி நிலத்தின் காட்சிகளை நவீனக் கவிதைகளாக வழங்கிப் புகழ் பெற்றார். இசையில்லாத இலையில்லை (2000) அநாதி காலம் (2002) ஒளியறியாக் காட்டுக்குள் (2007) நிராசைகளின் ஆதித்தாய் (2014) காயா (2016) வல்லபி (2017) முதலிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்ட வர். கண்களால் கைது செய், அடுத்த சாட்டை, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் இவர் எழுதிய பாடல்கள் வெற்றிபெற்றன எனலாம்.
இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள ‘கிங்ஸ் இண்ஸ்டியூட்’ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சிறுநீரகப் பிரச்சனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த ஐந்து நாட்களாகப் போராடி வரும் இவருக்கு உதவும்படி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். பிரபல திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடைய தம்பியுமாக மு.களஞ்சியம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டுள்ளார். சமீபத்தில் பிரபல இயக்குநர் வசந்தபாலன் இவ்வாறு கடும் தொற்றுக்கு ஆளாகி டாக்டர் கு.சிவராமன் உள்ளிட்ட பலருடைய உதவியால் மீண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.