free website hit counter

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் புதிய முயற்சி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எவர்கிரீன் கேங்ஸ்டர் கிளாசிக்ஸ் படமான ‘பாட்ஷா’படத்தின் இயக்குநர் என்றால் தமிழ் ரசிகர்கள் சுரேஷ் கிருஷ்ணா என்று சொல்லிவிடுவார்கள். அந்த பெயர் சொன்னால் போதும் அவரது புகழ் விளங்கும். அவர் பன்மொழி சினிமாக்களின் இயக்குநர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியவர். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறிப்பிடத்தக்க படத்தை இயக்கி வெற்றி பெற்றவர்.

குறிப்பாக கமலுக்கு 'சத்யா', ரஜினிக்கு 'பாட்ஷா' ரகுமானுக்கு 'சங்கமம்' என்று மைல்கல் படங்களின் பட்டியல் நீளும். சுமார் 40 படங்கள் இயக்கியுள்ள சுரேஷ் கிருஷ்ணா, சின்னத்திரை பக்கமும் விட்டு வைக்கவில்லை. சன், விஜய் போன்ற முன்னணித் தொலைக்காட்சிகளில் தொடர்கள் பலவற்றை இயக்கியுள்ளார். குறிப்பாக சன் டிவிக்கு இவர் இயக்கிய 'மகாபாரதம்' ஒரு உதாரணம். இப்போது இணையத் தொடர்கள் இயக்கத் தயாராகிவிட்டார். இயக்குநராக அல்ல ஒரு தயாரிப்பாளராக, புதிய முகத்தோடு காலடி எடுத்து வைத்திருக்கிறார். தனது சுரேஷ் கிருஷ்ணா புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் 'சார்பில் ஏற்கெனவே தொலைக்காட்சித் தொடர் தயாரித்தவர், இப்போது வெப் சீரீஸ் ஒன்றைத் தயாரித்துள்ளார். ‘இன் த நேம் ஆப் காட்’ என்ற பெயரில் இந்த வெப்சீரிஸ் தெலுங்கில் உருவாகி இருக்கிறது. அதாவது 'கடவுளின் பெயரால்' என்ற பொருளில் தலைப்பு உள்ளது.

பிரியதர்ஷி, நந்தினி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இதை எழுதி இயக்கி இருப்பவர் வித்யாசாகர் முத்துக்குமார். ஏராளமான நட்சத்திரங்களை கொண்டு இயக்கிவிட்டு இப்போது இணையத் தொடர் தயாரித்து இருப்பது பற்றி அவர் கூறும்போது “காலமாற்றத்தில் ஒரு புதிய காட்சி வடிவம் தான் இந்த வெப்சீரீஸ். இந்தப் புதிய தளத்தின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனக்கு ஈர்ப்பு வந்தது. அதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. நல்ல எதிர்காலம் உள்ள ஒரு தளமாக இது பட்டது. அதே நேரத்தில் சினிமா திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் உருவாக்குவதில் இல்லாத சுதந்திரமும் காட்சி பிரமாண்ட சாத்தியமும் இந்த வெப்சீரீஸ் தளத்தில் உள்ளது.

எந்த சமரசங்களும் இல்லாமல் நினைத்ததை அப்படியே இதில் கொண்டுவரமுடியும். இப்படித்தான் 'இன் த நேம் ஆப் காட் ' சீரீஸை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் .நான் தயாரித்து இருக்கிறேன். ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அதே பலத்தோடு அதையும் மீறிய காட்சி பிரமாண்டத் தோடு இதை உருவாக்கி இருக்கிறோம். இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி போன்ற நகரங்களிலும் காடுகள், ஆறுகள் போன்ற இடங்களிலும் பல ஷெட்யூல் போட்டு எடுத்தோம். ஏராளமான நடிகர்களோடும் பெரும் மக்கள் கூட்டத்தோடும் படப்பிடிப்பு நடத்தி இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. எனக்கு இதில் ஈடுபட ஆர்வம் இருந்தாலும் ஈடுபடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அல்லு அர்ஜுன் தான் என்னை ஊக்கமூட்டி இறக்கி விட்டார். அவர் தான் எனக்கு தைரியமும் நம்பிக்கையும் கொடுத்தவர். அந்த வகையில் அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ஓர் அப்பாவி மனிதன் எந்த வம்பு தும்புக்கும் செல்லாதவன் சமூக அழுத்தத்தாலும் மக்களது நெருக்குதலாலும் எப்படி வன்முறைப் பாதைக்கு தள்ளப்பட்டு இழுத்துச் செல்லப்படுகிறான் என்பது கதை.” என்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction