திரு. டி. ராஜேந்தர் அவர்களுக்கு, வணக்கம்.
தங்கள் மகன் திரு. சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர் திரு. சுரேஷ் காமாட்சி தயாரித்த வெளியான மாநாடு
திரைப்படம் சம்மந்தமாக தயாரிப்பு நிலையிலும், வெளியீட்டு நிலையிலும் TFAPA பலமுறை தலையிட்டு படம் சுமூகமாக வெளியாக உதவியதை தாங்கள் அறிந்ததே. படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றி பெற்று இன்று திரு. சிலம்பரசன் அவர்களின் வியாபாரமும் அவர் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!
இந்த வெற்றிக்குப் பின்னால் இதன் தயாரிப்பாளரும், நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை நீங்கள் உட்பட மொத்த திரையுலகமும் அறியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் இருவர் மீதும் தாங்கள் வழக்குத் தொடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். மாநாடு வெளியீட்டுக்கு முந்தையநாள் மொத்த திரையுலகமும் படம் வெளியாக பிரதிபலன் பாராமல் உதவ முன்வந்தது இன்றும் நாம் ஒரு குடும்பமாக இருப்பதற்கு சான்று.
படத்தின் தொலை்காட்சி உரிமம் விற்கப்படாத்தால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்திரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வர தாமதமானாலும் பரவாயில்லை படத்தை வெளியாக அனுமதிப்பதாக நிதியாளர் பெரியமனதுடன் ஒத்துக்கொண்டதால் தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உத்திரவாதம் தர முனவந்தீர்கள். படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றியடைந்து, தொலை்காட்சி உரிமமும் நல்ல விலைக்கு விற்று, இன்று தயாரிப்பாளரே கடனை திரும்பி தருகிறார். ஆனால்
திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிக தவறான முன்உதாரணம் ஆகும். ஜாமீன்தாரர் சொத்துக்களுக்கு உரிமம் கோரமுடியுமா? திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா?
ஒரு அமைப்பில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாக படத்தை வெளியிட முயற்சித்தது எந்தவிதத்தில் நியாயம்? நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா?
இதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் திரு. சுரேஷ் காமாட்சியும் நஷ்ட ஈடு கேட்டூ உங்கள் மீது வழக்கு தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்?
வியாபாரக் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், வழக்கு போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்குள்ளாக்கியிருப்பதை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அன்புடன்,
பாரதிராஜா
தலைவர்,
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்.