கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. பிஜு மேனனும், பிருத்விராஜும் எதிரும் புதிருமாக வேடங்களில் நடித்திருந்தனர்.
தெனாவெட்டே திருவுருவாகக் கொண்ட கோஷியை, சட்டம் அனுமதித்ததைவிட அதிக மதுபானம் எடுத்துச் சென்றதற்காக இன்ஸ்பெக்டர் அய்யப்பன் கைது செய்கிறார். தனது தன்மானம் பறிப்போய்விட்டதாக நினைக்கும் கோஷி, தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அய்யப்பனுக்கு குடைச்சல் கொடுக்கிறார். அய்யப்பனை பழி வாங்குவதே கோஷியின் ஒரே நோக்கம். பொறுத்துப் பார்த்த அய்யப்பன் தனது சுயரூபத்தை காட்டுகிறார். பிறகுதான், தான் சண்டைக்குச் சென்றது சாதாரண ஆளில்லை என்பது கோஷிக்கு தெரிய வருகிறது. இந்த இருவரது மோதலை சரவெடி திரைக்கதையில் படமாக்கியிருந்தார் சமீபத்தில் மறைந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் சச்சிதானந்தம்.
இந்தப் படம் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. ஆனால் தெலுங்குத் திரையுலகினர் தமிழ் திரையுலகை முந்திக்கொண்டுவிட்டனர். வரும் 12-ஆம் தேதி தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்குகிறது. பவன் கல்யாணும், ராணாவும் இதில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இதனை சாகர் கே.சந்திரா தெலுங்கில் ரீமேக் செய்து இயக்குகிறார்.
தெலுங்குக்கு ஏற்றபடி கதை, திரைக்கதையில் மாறுதல்கள் செய்துள்ளார். வரும் 12 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கயிருப்பதை முன்னிட்டு நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷை நாயகிகளாக ஒப்பந்தம் செய்துள்ளனர். தெலுங்கு ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரத்துக்கே அதிக முக்கியத்துவம் இருக்குமாம். அல்லு அர்ஜுனின் செம்மரக் கட்டை கடத்தல் படமான ‘புஷ்பா’வில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது சகோதரியாக, அதாவது தமிழ்ப் பெண்ணாக நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.