பாலிவுட் திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்த நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
கடந்த மாதம் பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பினால் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார்.
நடிகர் திலீப் குமார் இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவராக இருந்ததோடு சிறந்த நடிகருக்கான விருது உட்பட; தாதாசாகேப் பால்கே விருதும் மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தனது மனைவி சைரா பானுவுடன் ஒன்றாக வசித்து வந்த திலீப் குமாரின் உண்மையான பெயர் யூசுப் கான். இதனால் இவரை, பாலிவுட்டின் முதல் ‘கான்’ நடிகர் என அழைத்தனர். இவர் அக்பரின் மகன் சலீமான நடித்த ‘முகல் இ-அசாம்’ படம் இந்திய அளவில் இவரைப் பிரபலமாக்கியது. பின்னர், தேவதாஸ், ராம் அவுர் ஷியாம், அந்தாஸ், மதுமதி மற்றும் கங்கா ஜமுனா உள்ளிட்ட புகழ்பெற்ற காவிய கால இந்தி சினிமாவின் மிகச் சிறந்த படங்களில் நடித்தவர். முதன் முதலில் மெதட் ஆக்டிங் முறையை பாலிவுட்டில் முயன்று வெற்றிபெற்றவர். இவரது திரைப்படங்களின் முடிவுகள் சோகமாக இருந்தாலும் படங்கள் பட்டி தொட்டி எங்கும் வெற்றிபெற்றன.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    