‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சுதா கொங்காரா அடுத்து சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இயக்கிய படம் சூரரைப்போற்று.
பண வசதி இல்லாதவர்களும் விமானத்தில் பயணம் செய்யவேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தில் டெக்கான் ஏர்வேஸ் எனும் தானியார் விமான சேவை நிறுவனத்தைத் தொடங்கி நடத்திக்காட்டிய இந்தியத் தொழில் முனைவரான ஜி.ஆர்.கோபினாத்தின் கதாபாத்திரத்தை தன்னுடைய உலகத் தரமான நடிப்பால் திரையில் வாழ்ந்து காட்டியிருந்தார் சூர்யா. கோரோனா முதல் அலை தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்தபோது கடந்த 2020 நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. விமர்சன ரீதியாகவும் அமேசானின் அதிக பார்வையாளர்களை எட்டிய வகையிலும் இந்தப் படம் மிகப்பெரிய வீச்சை அடைந்தது. தவிர ஆஸ்கர் போட்டியிலும் தனிப்பட்ட முறையில் கலந்துகொண்டது.
என்றாலும் இப்படத்தை திரையரங்கில் பெரிய திரையில் பார்க்கும் மகிழ்ச்சி கிடைக்கவில்லையே என்று ரசிகர்கள் பலரும் ஏங்கினர். இந்நிலையில் மதுரை மாநகர் சம்மட்டிபுரத்திலுள்ள மிட்லண்ட் திரையரங்கில் கடந்த இரு நாட்களாக திரையிடப்பட்டு வருகிறது. மிட்லண்ட் சினிமாஸில் வெளியாகும் தகவலை சில நாட்களுக்கு முன் அறிந்த சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் ஆன்லைனிலும் நேரிலும் வந்து டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்கினார்கள். இன்று காலை திரையரங்க வாசலில் சூர்யா ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக குவிந்தனர். சூர்யா பேனருக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர். படத்தை திரையில் கண்டவுடன் ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பியும், பாடல்களுக்கு எழுந்து நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்
இதுகுறித்து அத்திரையரங்கின் திரையரங்க நிர்வாகிகள் தெரிவிக்கும் போது: "என்னதான் ஓடிடி வழியாக டிவியில் படம் பார்த்தாலும் திரையரங்கில் பார்க்கும் அனுபவமே தனிதான். அதிலும் ரசிகர்களுக்கு தங்கள் ஹீரோவை பெரிய திரையில் பார்க்கும் உற்சாகமே அலாதியானது. அந்த வகையில் ஓடிடியில் வந்து பலராலும் பார்க்கப்பட்டிருந்தாலும் எங்கள் திரையரங்கில் படம் வெளியாவது தெரிந்து ரசிகர்கள் ஆர்வமுடன் வருகை தந்துள்ளனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. மதுரை ரசிகர்கள் மட்டுமல்ல, பல மாவட்டங்கள், வெளி மாநில ரசிகர்களும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து படம் பார்க்க வந்துள்ளனர். திரையரங்கில் படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இருக்கும் வரை திரையரங்கத் தொழிலுக்கு அழிவில்லை" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.