மறைந்த பத்திரிகையாளர், எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புனைவுடன் கூடிய வரலாற்று நாவல் ‘பொன்னியின் செல்வன்’.
அதை அதே பெயரிலேயே மணிரத்னம் திரைப்படமாக இயக்கிவருகிறார். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படம் வரும் 2022-ஆம் ஆண்டு வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் பெரும்பகுதி கோட்டைக் கொத்தளங்களில், கடல், வனம், சமவெளிப்பகுதிகளில் நடப்பவை. தற்போது தமிழ்நாட்டில் படப்பிடிப்புகளுக்கு ஏற்ற சூழ்நிலைகள் இல்லாததால் பெரும்பாலும் வடமாநிலங்களில் உள்ள கோட்டைக் கொத்தளங்களில் இப்படத்தின் காட்சிகளை மணிரத்னம் தலைமையிலான படக்குழு படமாக்கி வருகிறது. கடந்த மாதம் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கபட்ட செட்களில் பல காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய பிரதேசில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் உபி அருகில் உள்ள புத்தேல்கண்ட் கோட்டையில் படப்பிடிப்பு நடந்தது. இந்தமாதம் மத்திய பிரதேசத்தில் புகழ்பெற்ற குவாலியர் கோட்டை, ஆர்ச்சனா கோட்டை, இந்தூர் ராயல் பாண்ட் எனப்படும் அரசப்பரம்பரையினர் பயன்படுத்திய கலையழகுமிக்க குளம் ஆகியவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த இடங்கள் அனைத்திலும் ஐஸ்வர்யா ராய் - சரத்குமார் பங்கேற்ற காட்சிகளை படம்பிடித்துள்ளார் மணிரத்னம்.
தற்போது உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி தாலுக்காவில் அமைந்துள்ள ஓர்ச்சா கோட்டை நகரில் படப்பிடிப்பு நடந்து இங்கு அமைந்துள்ள கட்டிடங்கள் கோடைகள் அனைத்தும்16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. தற்போது இங்கு எடுக்கப்பட்டுவரும் காட்சிகளில் நந்தினியாக நடித்துவரும் ஐஸ்வர்யாராய், குந்தவையாக நடித்துவரும் த்ரிஷா, வந்தியத் தேவனாக நடித்துவரும் கார்த்தி, ஆதித்த கரிகாலனாக நடிக்கும் விக்ரம் ஆகியோர் சம்மந்தப்பட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்து ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆராத்யாவுடன் வந்திருந்தார்.
மேலும் ஓர்ச்சா கோட்டையின் முக்கிய வாசலிலிருந்து குதிரையில் அமர்ந்தபடி தனது படைகள் தொடர விக்ரம் வெளியேறும் காட்சிகள் இன்று படமாக்கப்பட்டுள்ளன அவரை நடிகை ஐஸ்வர்யா ராய் வசனங்கள் பேசி வழியினுப்பி வைக்கும் காட்சிகளும் எடுக்கப் பட்டன. ஓர்ச்சாவின் புகழ்பெற்ற லஷ்மிநாராயண் கோயில் முன்பாகவும் தனியாக செட் அமைத்தும் படப்பிடிப்பு நடைபெற்றது. இது குறித்து மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் நம்மிடம் கூறும்போது, “கடைசியாக ஓர்ச்சாவில், விக்ரமுடன் ஐஸ்வர்யா நடித்த மணிரத்னம் படமான ‘ராவணன்’ காட்சிகளும் இக்கோட்டையில் பதிவாயின. அப்போது ஏதோ சில காரணங்களால் அக்கோட்டையின் முழு அழகையும் படம் எடுக்க முடியாமல் போனது. இதை மனதில் வைத்து மீண்டும் மணி ரத்னம் தனது ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக கடந்த 2 வருடங்களாக ஓர்ச்சா வரமுயற்சி செய்தார். இதற்காக ஐஸ்வர்யாராயின் கால்ஷீட் கரோனா உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி, தற்போது இந்தப் படம் விரைந்து எடுக்கப்படுகிறது” என்று கூறினார்கள்.