free website hit counter

தளபதி விஜய் ‘நுழை வரி வழக்கு’ தீர்ப்புக்குத் தடை !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தளபதி விஜய் 11 ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்திலிருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரியாக ரூ.1,88,11,045 ரூபாயை செலுத்தியிருந்ததை நுழைவு வரிக்கு எதிரான விலக்கு கோரும் தன்னுடைய உயர்நீதிமன்ற மனுவில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கை அவர் தொடுக்கும்முன் வாங்கிய காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு சென்றபோது, நுழைவு வரியை தமிழ்நாடு வணிக வரித்துறையில் செலுத்தி ஆட்சேபனை இல்லா சான்று வாங்கிவரும்படி விஜய்க்கு அதிகாரிகள் அப்போது உத்தரவிட்டனர்.

ஆனால் கேரளா மற்றும் தமிழ்நாடு உயர் நீதிமன்றங்கள் நுழைவு வரி செலுத்த வேண்டியதில்லை என உத்தரவிட்டுள்ளதாகக்கூறி அதை செலுத்த நடிகர் விஜய் மறுத்துள்ளார். அதேசமயம் நுழைவு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால், வரியை செலுத்த வேண்டுமென வணிகவரித்துறை உத்தரவு பிறப்பித்தது. வணிக வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2012-ல் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் நடிகர் விஜய். அந்த வழக்கில், 20 சதவீதம் நுழைவுவரி செலுத்திவிட்டு வாகனத்தை பதிவுசெய்ய இடைக்கால உத்தரவு 2012 ஜூலை 17-ல் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி 2012 ஜூலை 23ல் 20 சதவீத வரியை செலுத்திய விஜய், வாகனத்தை பதிவு செய்து இன்று வரை பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த வழக்கு, இம்மாதம் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவர் வழங்கிய தீர்ப்பில் “நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நடிகர் விஜய் 2 வாரங்களில் வரி செலுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டத்துடன் நில்லாது தனிப்பட்ட முறையுலும் தேவையின்றி நீதிபதி விமர்சனம் செய்ததாக தமிழ்நாட்டில் பொதுக்கருத்து உருவானது. மேலும் நீதிபதி இந்த வழக்கு தொடர்ந்ததற்காக ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து, அதை முதல்வரின் நிவாரண நிதிக்கு இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

குறிப்பாக நீதிபதி தன்னுடைய தீர்ப்பின் இறுதியில் “சமூக நீதிக்காகப் பாடுபடுவதாக சினிமாவில் காட்டிக்கொள்ளும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். வரி என்பது நன்கொடையல்ல, அது கட்டாய பங்களிப்பு” என்று சாடியிருந்தது சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது. நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. இந்நிலையில்தான் வாகன நுழைவு வரிபாக்கியை ஒரு வாரத்தில் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக்கோரியும் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்துள்ளார். இதை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், நடிகர் விஜய்யின் ரோல்ஸ்ராய் கார் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction