free website hit counter

நடிகை ராஷி கண்ணாவின் கருணை அழைப்பு!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியா மிகமோசமான மருத்துவ நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கரோனா பெருந்தொற்று புதுப்புது சவால்களை நம் முன் நிறுத்துகின்றது.

இத்தகைய வேளையில், நாம் ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து நம்மால் இயன்ற உதவிகளை மனித குலத்திற்கும், இன்னும் பிற உயிர்களுக்கும் செய்வது சிறந்தது. இதனைக் கருத்தில் கொண்டே நடிகை ராஷி கன்னா, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் களத்தில் இறங்கியிருக்கிறார்.

கரோனா பேரிடர் காலம் தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே அவர் அவ்வப்போது உதவிகளை செய்துவந்தார். தற்போது Be The Miracle என்ற பெயரில் முயற்சியை முன்னெடுத்துள்ளார். இதன்மூலம், பசித்தோருக்கு உணவு வழங்குவதே அவரின் இலக்கு. கரோனாவால் வாழ்வாதாரம் இழந்தோரைத் தேடி பல்வேறு உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்துவந்தாலும் கூட தனது சேவையைப் பற்றி வெளியே தெரிவிக்காதவராக இருந்துவந்தார். அவரது நற்செயல்களை மவுனம் சூழ்ந்திருந்தது. ஆனால், அவரது குடும்பத்தினரும், நண்பர்களும், நலன் விரும்பிகளும் ஊக்குவித்ததின் அடிப்படையில் தற்போது அதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர விரும்புகிறார். தனது நற்செயல்களை வெளிப்படையாகக் கூறுவதன் மூலம் நல் உள்ளம் கொண்ட பலரையும் பெருந்தொற்று நெருக்கடியைக் கடக்க ஏழை, எளிய மக்களுக்கு உதவச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் அவர் இதனைச் செய்கிறார்.

Be The Miracle சேவையில் ராஷி, பல தனியார் தொண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதேபோல் விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கும் அமைப்புகள், முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யும் அமைப்புகளுடனும் இணைந்து செயலாற்றி வருகிறார். இவ்வாறாக நற்பணிகள் பலவற்றையும் செய்ய தனது குடும்பத்தாரின் பங்களிப்பு நண்பர்கள், நலன் விரும்பிகளின் நிதியுதவி மட்டுமே போதுமானதாக இருக்காது என அவர் நினைக்கிறார். அவ்வாறு வரும் உதவிகள் சமுத்திரத்தில் சில துளிகள் போல் கரைந்துவிடுவதாகக் கருதுகிறார். இதற்காக நலத்திட்டங்களுக்கு மேலும் நிதி திரட்டும் வகையில், அவரின் குழுவினர் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளனர். அதைப்பார்த்து நல்லுள்ளம் கொண்டோர் உதவிக்கரம் நீட்டக்கூடும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், தனது முயற்சி குறித்து ராஷி கன்னா கூறுகையில், "கரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து சாமான்ய மக்கள் படும்பாட்டைப் பார்க்க சகிக்கவில்லை. #BeTheMiracle மூலம் நான் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். எனது குழுவினர் இந்த கொடூர நோயின் அச்சுறுத்தலுக்கு இடையேயும் வெளியே சென்று மக்கள் படும் இன்னல்களை காட்சிப்படுத்திக் கொண்டுவந்திருக்கின்றனர். நிறைய குடும்பங்கள் மிகவும் கொடுமையான சூழலில் இருக்கின்றன. கிட்டத்தட்ட பட்டினியால் வாடுகின்றன. இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் தங்களின் மனங்களைத் திறந்து உதவ வேண்டும் என விரும்புகிறேன். பெருந்தொகையைத் தான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த கடின காலத்திலிருந்து விடுபடலாம். நாம் ஒன்றிணைந்தால் இல்லாதோர் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தலாம். ஒன்றுபடுவோம் வாருங்கள்" என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction