free website hit counter

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் கமல்ஹாசன் கண்டிப்பு !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் கமல்ஹாசன் கண்டித்தார். இதுபற்றி மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்  வெளியிட்ட அறிக்கையில்;

ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘மகாநதி’. இன்றும் அந்த பதட்டம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டும்.

இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். ஓர் அறிவுச்சமூகமாக நாம் அனைவருமே போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction