சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை 2022ஆம் ஆண்டு ஜனவரி
31ஆம் திகதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், இந்தியாவுக்கு வந்துசெல்லும் பட்டியலிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் மீதான தடை 2022 ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
எனினும், சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்பதையும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
சர்வதேச விமானங்களை டிசம்பர் 15ஆம் திகதி முதல் வழக்கம் போல இயக்குவதற்கு அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், எதிர்பாரா வகையில் ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரவி விட்டது.
இதையடுத்து அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது. இதன்படி, ஜனவரி 31ஆம் திகதி வரை சர்வதேச விமானப் பயணத்துக்கு தடையை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் திகதி முதல் சர்வதேச விமானப் பயணத்துக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து இந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.