இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்புத்தேர்வுகள் நடத்துவது தொடர்பில் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி இவ்வாண்டு இத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை ஜூன் 1 ஆம் திகதி; சிபிஎஸ்இயின் பன்னிரெண்டாம் வகுப்பு வாரியத் தேர்வுகள் தொடர்பான மறுஆய்வுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. காணொளி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைமைகளைக் கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்பு இறுதித்தேர்வுகளை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை 'நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோல்களின்படி' நேரத்திற்கு ஏற்ப தொகுக்க சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்த அம்சத்தில் எந்த சமரசமும் இருக்காது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இம்முடிவை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.