சுவிற்சர்லாந்தில் புதிய ஆண்டில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் என்ன எனும் எதிர்பார்ப்பில் முதலில் வருவது கோவிட் தொற்றும், அது தொடர்பான விதிகளும் விலகிச் செல்லுமா என்பதே. குறிப்பாக முக கவசம் இல்லாத சூழல் சாத்தியமாகுமா?
சுவிற்சர்லாந்தில் தற்போது கோவிட் நடவடிக்கைகள் மற்றும் கோவிட் சான்றிதழ் என்பவை, அதிகாரப்பூர்வமாக ஜனவரி 24, 2022 அன்று காலாவதியாகும். அன்றிலிருந்து முகமூடி அணிவதைவிட்டு, முத்தம், கை குலுக்கல் என்பவை மிகுந்த பழைய நாட்களுக்குத் திரும்புவதை மக்கள் எதிர்பாரத்திருக்கிறார்கள். ஆனால் சுவிற்சர்லாந்து முழுவதும் உள்ள கோவிட் சூழ்நிலையைப் பொறுத்தவரை, நடவடிக்கைகள் ஜனவரியைத் தாண்டி புதிய ஆண்டிலும் நீட்டிக்கப்படலாம் என்றே தெரிகிறது.
சுவிஸ் அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்தவித அறிவிப்பும் இல்லை. ஆனால் 2021ஐ உதாரணமாகக் கொண்டால், 2022 வசந்த காலத்தில் வானிலை வெப்பமடையும் போது நடவடிக்கைகள் தளர்த்தப்படுவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வருகிறது.
சுவிஸ் அரசு முன்னர் தெரிவித்தது போல, இந்த முறை நடவடிக்கைகளை அகற்றுவதற்கான முக்கிய அளவுகோல் தொற்று விகிதங்கள் என்பதற்கு மாறாக, மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான சுமுகநிலை தோன்றும்வரை, சுவிற்சர்லாந்தின் தற்போதைய விதிகள் தளர்வுகளுடன் தொடரும் என எதிர்பார்க்கப்படகிறது.
2022 ஜனவரி 1 முதல் ஊனமுற்றோர் காப்பீட்டு சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது.
புதிய முறையின் கீழ், 40 முதல் 69 சதவீத ஊனமுற்ற பயனாளிகளுக்கு நேரியல் அடிப்படையில் ஊனமுற்றோர் ஓய்வூதியம் ஒதுக்கப்படும். ஊனமுற்றோர் ஓய்வூதியம் பெறுபவர்களை முடிந்தவரை வேலை செய்ய ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.
இந்தச் சீர்திருத்தம் இளைஞர்கள் மற்றும் மனநலப் பிரச்சனைகள் உள்ளவர்களின் வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2022 ஜனவரி 1 முதல், குரோஷியர்கள் மற்ற EU/EFTA நாட்டினரைப் போலவே சுவிடற்சர்லாந்தில் வேலை செய்யலாம்.
குரோஷியாவின் குடிமக்கள் மற்ற EU/EFTA நாட்டினரின் அதே உரிமைகளின் கீழ் சுவிற்சர்லாந்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். சுவிஸ் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் கீழ், குரோஷியர்கள் சுவிட்சர்லாந்தின் தொழிலாளர் சந்தையை அணுகவும், குரோஷியாவில் இருந்து வரும் மக்களின் 'முழுமையான' சுதந்திர நடமாடவும் சுவிஸ் அனுமதிக்கும்
ஜனவரி 1முதல் உத்தியோகபூர்வ ஆவணங்களில் பாலின அடையாளத்தைச் சரிசெய்வது எளிதாக இருக்கும்.
ஜனவரி 1ம் திகதி நடைமுறைக்கு வரும் சிவில் கோட் திருத்தமானது, மாற்று அடையாளத்தை உடையவர்கள், சிவில் நிலைப் பதிவேட்டில் மிகவும் எளிதாக, ஒரு எளிய அறிவிப்பின் மூலம் பொருத்தமான மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கும்.
2022 ஜூலை முதல் சுவிஸ் வாகனங்களில் கருப்புப் பெட்டிகள் பொருத்தப்படும்
ஐ.நா.வின் விதிமுறை அமலுக்கு வந்த பிறகு, ஜூலை 1 முதல், புதிய வகை பயணிகள் கார்கள் மற்றும் வான்களுக்கு கருப்புப் பெட்டிகள் கட்டாயமாக்கப்படும்.
ஐரோப்பாவிற்கான ஐ.நா. பொருளாதார ஆணையத்தின்படி, சாலை விபத்துக்கள் மற்றும் வாகனப் பாதுகாப்பு குறித்த தரவுகளை சேகரிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அனுமதிப்பதை புதிய ஒழுங்குமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய சாதனத்தின் மூலம், வாகனம் நகரத் தொடங்கும் ஐந்து வினாடிகளுக்கு முன்பிருந்தும் வாகனம் அசையாமல் இருக்கும் வரையிலும் விபத்தை ஆய்வாளர்களால் மறு ஆய்வு செய்ய முடியும்.
வெளிநாட்டு தளங்களில் சுவிஸ் வாடிக்கையாளர்களின் ‘ஜியோ-பிளாக்’ முடிவு
சுவிஸ் இணைய பயனர்கள் சில சமயங்களில் சுவிற்சர்லாந்தில் ஒப்பிடக்கூடிய பொருட்களின் விலையை விட குறைவான பணத்திற்கு வெளிநாட்டில் பொருட்களை வாங்க முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், சில தளங்கள் தானாகவே வாடிக்கையாளர்களை ஸ்விஸ் தளத்திற்கு திருப்பி விடுகின்றன, அங்கு விலை அதிகமாக இருக்கும்.
வாடிக்கையாளர்களைத் தானாக சுவிஸ் பிளாட்ஃபார்மிற்கு திருப்பிவிடும் நடைமுறை, ஜனவரி 2022 முதல் பொறுத்துக்கொள்ளப்படாது. ஒரு சட்டமன்ற மாற்றம் இந்த நடைமுறையை ரத்து செய்யும், ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் சுவிட்சர்லாந்திற்கு மலிவான பொருட்களை வழங்க மறுக்கலாம் எனத் தெரிய வருகிறது.
எரிபொருள் விலை அதிகமாகலாம்.
CO2 உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான வாக்கெடுப்பை சுவிற்சர்லாந்து நிராகரித்த போதிலும், பெட்ரோல் விலை 2022 இல் மேலும் உயரும் என்று தெரிகிறது.
தற்போது, ஒவ்வொருவரும் காலநிலை பாதுகாப்பு முயற்சிகளுக்காக லிட்டருக்கு 1.5 சென்ட் செலுத்துகின்றனர். வாகன ஓட்டிகளுக்கான மானியம் காலாவதியானதால், இது 2021ஆம் ஆண்டின் இறுதியில் லிட்டருக்கு ஐந்து காசுகளாக அதிகரிக்கப்பட உள்ளது.
இது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பைக் குறிப்பிட்டுள்ள நிலையில், சுவிஸ் அரசாங்கத்தின் மத்தியில் இது பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது.