ஆப்கானில் தலிபான்களது கொடுங்கோல் ஆட்சி தொடர்பாக வெளிப்படையாக சமூக வலைத் தளங்களில் விமரிசித்த ஆப்கான் பல்கலைக் கழகத்தின் முக்கிய பேராசிரியர் ஒருவரைக் காபூலில் தலிபான்கள் கைது செய்திருப்பதாக தலிபான்களின் அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கம் 2021 ஆகஸ்ட்டில் வெளியேற்றப் பட்டதில் இருந்து, சமூக வலைத் தளங்களிலும், பல தொலைக் காட்சி பேச்சு நிகழ்ச்சிகளிலும், ஃபைஷுல்லாஹ் ஜலால் என்ற பேராசிரியர் தோன்றி தலிபான்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். இக்கருத்துக்களில், ஆப்கானில் மிகவும் மோசமடைந்திருக்கும் நிதிப் பிரச்சினை, சர்வாதிகார ஆட்சிப் போக்கு என்பவற்றுக்கு எதிராக தலிபான்களை கடுமையாக சாடியும் இருந்தார்.
மேலும் பெண்கள் உரிமை தொடர்பாக மீண்டும் மோசமடைந்திருக்கும் போக்கு, பல ஆப்கான் பத்திரிகையாளர்கள் கைது என்பவற்றுக்கு எதிராகவும் பேசி வந்தார். இந்நிலையில் பேராசிரியர் ஃபைஷுல்லாஹ் ஜலாலின் கைது ஆப்கான் மக்கள் மத்தியிலும், சர்வதேசத்துக்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துயுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
உலகளவில் கோவிட் 19 இன் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் தனது மிக வேகமாகப் பரவும் தன்மை காரணமாக கடும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடென் கோவிட் பெரும் தொற்று அமெரிக்கர்களுக்கு நீண்ட காலப் பிரச்சினையாக இருக்காது எனத் தான் நம்புவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசும் போது, அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவில் கோவிட் 19 பெரும் தொற்று வலிமையுடன் கையாளப் படுவதாகவும், அங்கு தற்போது பெரும்பாலான பள்ளிகள் திறக்கப் பட்டு செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.