சமீபத்தில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒரு முறை தமது ஆட்சியை நிலை நிறுத்தி உள்ளனர் தலிபான் போராளிக் குழுவினர்.
ஏற்கனவே ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி பெருமளவிலான சொத்துக்களுடன் விமானம் மூலம் அண்டை நாடு ஒன்றிட்கு தப்பிச் சென்றிருக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், தாம் கைப்பற்றிய பகுதிகளில் முன்னால் அரச அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் பொது மன்னிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தலிபான்கள் அறிவித்துள்ளனர். தலிபான்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், அரச அதிகாரிகள் எந்தவித அச்சமுமின்றி பணிக்குத் திரும்புமாறு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப் படுவதால் முழு நம்பிக்கையுடன் உங்கள் அன்றாடப் பணிகளை நீங்கள் ஆரம்பிக்கலாம் என்றும் தலிபான்களது அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதேவேளை ஜப்பான் அரசு காபூலில் உள்ள தனது தூதரகத்தை ஆப்கானில் நிலவி வரும் பதற்ற நிலை காரணமாக மூடியுள்ளது. இத்தூதரகத்தில் இருந்து இறுதி 12 தூதரக அதிகாரிகளும் டுபாய் வாயிலாகத் தாயகம் திரும்பவிருப்பதையும் ஜப்பான் வெளியுறவு அமைச்சு உறுதிப் படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பெரிதளவு போர் ஏதும் இன்றி இலகுவாகத் தலிபான்கள் தலைநகர் காபூலைக் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.