free website hit counter

உலகை மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்டின் மிக வீரியமான ஒமிக்ரோன் திரிபு!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தென்னாப்பிரிக்காவில் அறியப் பட்டு மிக வேகமாகப் பரவி வரும் கோவிட் வைரஸின் நவீன மிக ஆபத்தான திரிபான ஒமிக்ரோன் இன் பரவல் சில ஐரோப்பிய நாடுகளில் அறியப் பட்டதை அடுத்து, தடுப்பூசிகள் பெரும்பான்மையாகப் போடப் பட்ட நாடுகளாக இருந்தாலும், பல ஐரோப்பிய நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரப் படுத்தத் தொடங்கியுள்ளன.

நெதர்லாந்தில் 13 ஒமிக்ரோன் தொற்றுக்களும், டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இரு திரிபுகளும், இனம் காணப் பட்டதை அடுத்து பல ஐரோப்பிய, மேற்குலக நாடுகள் மீண்டும் பயணத் தடைகளை தீவிரப் படுத்தத் தொடங்கியுள்ளன. கோவிட் இன் நவீன ஒமிக்ரோன் திரிபானது தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டு பிடிக்கப் பட்டாலும் தற்போது, பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், பொட்ஸ்வானா, இஸ்ரேல், அவுஸ்திரேலியா மற்றும் ஹாங்கொங் இலும் கண்டறியப் பட்டுள்ளது.

இந்த புதிய ஆபத்தான திரிபானது இன்று உலகில் பாவனையில் இருக்கும் சில கோவிட் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப் படாது என ஊகிக்கப் படுவதால் தான் உலக நாடுகள் கலக்கமடைந்துள்ளன. ஒமிக்ரோனின் புதிய வீரியமான தாக்குதல் அதிகரித்திருப்பதால், பல உலக நாடுகள் தமது மக்களை பொது இடங்களில் கட்டாய இடைவெளியைக் கடைப் பிடித்தல் மற்றும், முகக் கவசம் அணிதல், சேனிட்டைஷர் பாவித்து கைகளை சுத்தம் செய்து கொள்தல் போன்ற விதிகளை மீண்டும் கடுமையாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

கடந்த வாரம் தான் ஒமிக்ரோன் வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருந்தாலும், முந்தைய ஆபத்தான டெல்டா போன்ற திரிபுகளை விட இது அதிக ஸ்பைக் புரோட்டீன்களைக் கொண்டிருப்பதால் மனித செல்களுக்குள் எளிதாகப் புகுந்து விட முடியும் என்று மருத்துவவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் சிலரிடம் அறிகுறிகளே இல்லாமல் இது தொற்றியிருப்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளது. இது கோவிட் தடுப்பு மருந்துகளில் சிலவற்றை 40% வீதம் வரை செயலிழக்க வைப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. இந்த ஒமிக்ரோன் தொற்று பரவாமல் கட்டுப் படுத்த அது தோன்றிய தென்னாப்பிரிக்கா உட்பட பல ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு மேற்கு நாடுகள் முழு பயணத் தடை விதித்துள்ளன.

அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணம் அங்கு, கோவிட் தொற்றுக்கள் சமீப காலமாக சற்று அதிகரித்து வருவதாலும், ஒமிக்ரோன் திரிபு உலகை அச்சுறுத்தத் தொடங்கியிருப்பதாலும் மீண்டும் அவசர நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction