இலங்கையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், நாடு முழுவதும், முற்றாக முடக்கப்படலாம் அல்லது மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும், இது தொடர்பாக அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிய வருகிறது.
வைரஸ் தொற்றின் வேகம், மரணங்கள் அதிகரிப்பு, எனபவை காரணமாக, தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு நாட்டை முற்றாக முடக்குமாறு சுகாதார நிபுணர்கள் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், இவை தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெறும் கலந்துரையாடலைத் தொடர்ந்து, இறுதி முடிவு எட்டபடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் புதிய பயணக் கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு உத்தரவு குறித்த முடிவுகள், இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் எனவும், கொரோனா வைரஸ் டெல்டா மாறுபாட்டின் காரணமாக, மருத்துவ மனைகளில் கொரோனா நோயாளிகளின் சேர்க்கை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் மரணங்கள் தொடர்பில் உடனடி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நாளாந்த மரண எண்ணிக்கை 200 ஐத் தாண்டும் என்பதோடு நாளாந்தம் 5,000 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்படுவார்கள் என்று வைத்தியர்கள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    