லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஜாப்னா கிங்ஸ் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்று, கோப்பையை கைபற்றி சாதனை படைத்துள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் இன்று Mahinda Rajapaksha International கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இறுதி ஆட்டத்தில் திசாரா பெரேரா தலைமையிலான ஜாப்னா கிங்ஸ் அணியும், பனுக ராஜப்க்சே தலைமையிலான காலி கிளேடியேட்டர்ஸ் அணியும் மோதின. அதன் படி முதலில் ஆடிய, ஜாப்னா கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் ரஹ்மனுல்லா குப்ராஜ் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 56 ஓட்டங்கள் எடுத்த போது, ரஹ்மனுல்லா குப்ராஜ் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சமித் பட்டேல் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்து வந்த Tom Kohler-Cadmore உடன் ஜோடி சேர்ந்த அவிஷ்கா பெர்னாண்டோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் காலி கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்து வீச்சை நிதானமாகவும், அடித்தும் ஆடினார்.
அணியின் எண்ணிக்கை 119-ஐ தொட்ட போது மற்றொரு துவக்க வீரரான அவிஷ்கா பெர்ணாண்டோ 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நுவன் துஷாரா பந்து வீச்சில் பவுலியன் திரும்ப, அதைத் தொடர்ந்து வந்த சோயிப் மாலில் 11 பந்தில் 23 ஓட்டங்களும், கடைசி கட்டத்தில் திசாரா பெரேரா 9 பந்தில் 17 ஓட்டங்களும், Tom Kohler-Cadmore 41 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர்.
இதனால் ஜாப்னா கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின் 202 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு துவக்க வீரரான குசால் மெண்டிஸ்(39), தனுஷ் குணதிலகா(54), பென் டக்(0) என அடுத்தடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்தில் பவுலியன் திரும்பியதால், இறுதியாக காலி கிளேடியட்டர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்து, 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றியின் மூலம் ஜாப்னா கிங்ஸ் அணி 2021-ஆம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜாப்னா அணி தான் பட்டத்தைக் கைப்பற்றியது.
அப்போது அந்தணிக்கு Jaffna Stallions என பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.