இலங்கையில் எரிபொருட்களின் விலை கடந்த ஜூன் 11ஆம் திகதி முதல் விலையேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது, இது தொடர்பில் எரிசக்தி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பொறுப்பினை ஏற்று பதவியிலிருந்து விலக வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்தது.
இந்நிலையில் நாட்டின் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே, எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்திருந்தார். இதனையடுத்து நாடு பல்வேறு நெருக்கடி நிலைமைகளை தற்போது சந்தித்துள்ள நிலையில், மேலும் அழுத்தங்களை சுமத்தும் வகையில் இந்த எரிபொருள் விலையேற்றம் இருப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன விசனம் தெரிவித்தது. இதனால் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்பினை ஏற்று, தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் வலியுறுத்தியிருந்திருந்தார்.
இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தினால் வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிகாட்டி இலங்கை மத்திய வங்கியின் எச்சரிக்கையை அடுத்தே குறித்த எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை அடிப்படையில் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 157 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெற்றோல் 184 ரூபாவாகவும், உள்ளது. மேலும் ஒட்டோ டீசல் 111 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 144 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.