இந்தியா மற்றும் இலங்கையிடைலான மூன்று போட்டிகளை கொண்ட தொடரின் டி20 போட்டியின் முதலாவது டி20 போட்டி நேற்று ஆர். பிரமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
புதிய வீரர்களை கொண்ட இந்திய அணி இலகுவான வெற்றியை பதிவு செய்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார். துஸ்மன்த சமீர முதல் பந்தை மிகச்சிறப்பாக வீச பிரித்வி சாவ் எதுவித ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளுக்கு 50 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 36 பந்துகளுக்கு 46 ஓட்டங்களையும் இந்திய அணி சார்பாக எடுத்தனர். துஸ்மன்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க தலா இரண்டு விக்கெட்டுகளையும், சம்மிக கருணாரத்ன ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. மேலும் கடைசி 10 போட்டிகளில் ஆர். பிரமதாச விளையாட்டரங்கில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிகள் பெறும் ஓட்டங்களின் சராசரி 164 என்பது குறிப்பிடத்தக்கது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பம் கிடைத்தாலும் இடையிடையே விக்கெட்டுக்களை இழந்ததால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் போனது. இலங்கை அணி சார்பாக தனது முதல் டி20 பேட்டியிலேயே சரித் அசலங்க 3 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 26 பந்துகளுக்கு 44 ஓட்டங்களை எடுத்தார். அவிஸ்க பெனான்டோ ஆரம்பம் முதலே நிதானமாக ஆடி 23 பந்துகளுக்கு 26 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுக்களையும், திபக் சஹர் 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர். குருனால் பாண்டியா, வருண் சக்கரவர்தி, யுவேந்திர சஹல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இலங்கை அணி 18.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி 38 ஓட்டங்களால் இலங்கை அணியினை வீழ்த்தியது. போட்டியின் ஆட்டநாயகனாக புவனேஸ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டார்.