free website hit counter

இலங்கை அணி, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமா?

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

T20 உலகக் கிண்ணத்துக்கு பாரிய எதிர்பார்ப்புகளின்றி இலங்கை அணி சென்றிருந்தாலும், தற்போது விளையாடிவரும் விதம் அணிக்கு உறுதியான மனநிலையை உருவாக்கியுள்ளது.

ஓமான் அணிக்கு எதிரான தொடர் முதல் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றுவரும், இலங்கை அணி இறுதியாக சுபர் 12 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியை மிகச்சிறந்த முறையில் வெற்றிக்கொண்டிருந்தது. குறிப்பாக, முதல் சுற்று போட்டிகள் மற்றும் பயிற்சிப்போட்டிகளில் அணிக்கு பந்துவீச்சாளர்கள் மாத்திரமே வெற்றிக்கு அதிகமான காரணமாக இருந்தனர். எனினும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் நெடுநாள் சவாலாக இருந்த மூன்றாமிலக்க வீரருக்கான சரியான தேர்வு தற்போது கிடைத்துள்ளது. சரித் அசலங்க மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கியது மாத்திரமின்றி, பங்களாதேஷ் அணி நிர்ணயித்திருந்த 172 என்ற வெற்றியிலக்கை, தன்னுடைய பங்காக 80 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதேநேரம், பானுக ராஜபக்ஷவும் அரைச்சதம் கடந்து பிரகாசித்திருந்தார். எனவே, துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா சற்று தடுமாறிவந்தாலும், அவர் அடுத்த போட்டிகளில் பிரகாசிக்க தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமாத்திரமின்றி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் சில தவறுகள் விடப்பட்டிருந்ததுடன் பினுர பெர்னாண்டோவின் இணைப்பு அதிகமான கேள்விகளை எழுப்பியிருந்தன.

எவ்வாறாயினும், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் உபாதைக்குள்ளாகிய மஹீஷ் தீக்ஷன மீண்டும் விளையாடுவார் என்ற உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, குறித்த மாற்றம் இலங்கை அணியில் மேற்கொள்ளப்படும் என்பதுடன், துடுப்பாட்டத்தில் சற்று தடுமாறிவரும் அவுஸ்திரேலிய அணிக்கு சரியான போட்டியை இலங்கை அணி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக மஹீஷ் தீக்ஷன உள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடவிட்டாலும்,  துடுப்பாட்டத்தில் தடுமாறிவரும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான சிறந்த ஒரு தெரிவாக மஹீஷ் தீக்ஷன இருப்பார். வனிந்து ஹஸரங்க இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளராக இருக்கும் போதும், மஹீஷ் தீக்ஷன இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி வருகின்றார். இவர், மூன்று போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் மஹீஷ் தீக்ஷனவை இதற்கு முதல் எதிர்கொண்டதில்லை. எனவே, இந்தப் போட்டியில், இலங்கை அணியின் துறுப்புசீட்டாக மஹீஷ் தீக்ஷன இருப்பார் என்பதில் எவ்வித கேள்விகளும் இல்லை.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20I போட்டி மோதல்களில், இரண்டு அணிகளும் சம பலத்தை கொண்டுள்ளன. இரு அணிகளும் 16  போட்டிகளில் தலா 8 வெற்றிகளை பெற்றுள்ளன. எனினும், இறுதியாக நடைபெற்ற 5 T20I போட்டிகளில், அவுஸ்திரேலிய அணி அதிகமான ஆதிக்கத்தை செலுத்திவருகின்றது. இறுதியாக நடைபெற்ற 5 போட்டிகளில், 4 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று ஆதிக்கத்தை காட்டி வருகின்றது.

அதேநேரம், இவ்விரு அணிகளும் மொத்தமாக 3 T20 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 2 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியும், ஒரு போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளன. எனினும், இவ்விரு அணிகளும் இறுதியாக 2010ம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தின் போதே நேரடியாக மோதியுள்ளன. அதன் பின்னர், எந்த T20 உலகக் கிண்ணங்களிலும் மோதவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இப்படியான சூழ்நிலையில் இன்று இலங்கை அணி வெற்றி பெற்றால் எதிர் வரும் ஏனைய போட்டிகளிலும் நிச்சயம் பிரகாசிக்கும் என இலங்கை ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றார்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction