இந்தியாவில் நடந்துவரும் ஐ.பி.எல் 2021 (இந்தியன் பிரிமியர் லீக்) நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச்
சேர்ந்த 18 வயதே ஆன இளம் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்ஸன் பஞ்சாப்புக்கு எதிராக அடித்த 63 பந்துகளில் 119 ஐ.பி.எல் வரலாற்றின் தலைசிறந்த சதங்களில் ஒன்று. 222 எனும் கிட்டத்தட்ட அசாத்தியமான இலக்கை கடைசி வரை நின்று அடித்து எட்டித் தொட முயன்றது சாதாரண சாதனை அல்ல. ஒருவேளை சஞ்சு இன்று வென்றளித்திருந்தால் கூட இந்த சதத்துக்கு இப்படி ஒரு காவிய அழகு வந்திருக்காது. வெற்றிக்கு பக்கத்தில் போய் தோற்கும் போது அதன் முற்றுப் பெறாத தன்மை அந்த முயற்சிக்கு ஒரு முடிவற்ற அழகைக் கொடுக்கிறது. இந்த விசயத்தில் அவர் பழைய சச்சினை நினைவுபடுத்துகிறார்!
துவக்க மட்டையாளர்கள் இன்னும் வேகமாக அடித்திருந்தாலோ பின்னால் ஆட வந்த திவாடியாவும் மோரிசும் அந்த நான்கு பந்துகளை வீணடிக்காமல் ஒற்றை ஓட்டங்கள் எடுத்திருந்தால் நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்காமல் இருந்திருப்பார்களோ? அதுவும் திவாடியா சற்று வைடாக விழுந்த பந்துகளை கவருக்கு மேல் அடிக்க முயன்றது தவறாகியது. அவருடைய ஷாட் தேர்வு இன்று சரியாக இருந்திருந்தால் கதையே வேறு. மோரிசும் அப்படியே - அடிக்க வேண்டிய நீளத்தில் விழுந்த இரு பந்துகளை அவரால் சரியாக அடிக்க முடியவில்லை. ஒரு சின்ன விசயம் தான் - அது ஆட்டத்தின் தலைவிதியை மாற்றியது. பஞ்சாப்பை பொறுத்த மட்டில் ஹூடாவின் அந்த சூறாவளி இன்னிங்ஸுக்குப் பிறகு பந்து வீச்சிலும் களத்தடுப்பிலும் காட்டிய நிதானம், புத்திசாலித்தனம் வெற்றிக்கு உதவியது. மறக்க முடியாத ஆட்டம்!