free website hit counter

முதல் டி20 போட்டி - இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதனிடையே மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் மழை காரணமாக போட்டி 12 ஒவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்றது.

இதன்படி முதலாவதாக களமிறங்கிய அயர்லாந்து அணியில் ஆண்ட்ரூ பால்பரீன் (0) ரன் ஏதும் எடுக்காமலும், பால் ஸ்ட்ர்லிங் 4 ரன்னும், கேரித் டிலேனி 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய ஹேரி டெக்டார், லோர்சன் டக்கருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தநிலையில் டக்கர் 18 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேரி டெக்டார் 29 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

இறுதியில் ஹேரி டெக்டார் 64 (33) ரன்களும், டாக்ரேல் 4 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 12 ஒவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 108 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அவேஸ் கான், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் தீபக் ஹூடா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் அதிரடியாக ஆடத்துவங்கிய இஷான் கிஷன் 26 ரன்களில் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலே எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக தீபக் ஹூடாவுடன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. இந்த சூழலில் இந்த ஜோடியில் ஹர்திக் பாண்ட்யா 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா 47 (29) ரன்களும், தினேஷ் கார்த்திக் 5 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 9.2 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 111 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக கீரீக் யங் 2 விக்கெட்டுகளும், ஜோஷ்வா லிட்டில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக சஹால் தெரிவானார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula