இந்தியாவில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை புதுப்பிக்க அங்குள்ள நூலக சபை உறுப்பினர்கள் குழந்தைகளின் வீடுகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் தொலைதூரக் கற்றலை அடுத்து மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை கண்டறிந்தது. மேலும் ஆசிரியர்களிடமிருந்து தொடர்ச்சியான ஆதரவு பள்ளி மாணவர்களுக்கு இல்லாத நிலையில், சிறு குழந்தைகள் அதிகளவில் வார்த்தைகளிலிருந்து அந்நியப்படுவதையும் கவுன்சில் கண்டறிந்தது. இதனையடுத்து மாவட்ட சபை புதிய திட்டத்தைத் தொடங்கியது. நூலகங்களை இளம் மாணவர்களின் வீடுகளுக்கு எடுத்துச்செல்லுமாறு அம்மாநில முதலமைச்சர் அறிவுறை வழங்கியதும் இத்திட்டத்திற்கான மற்றொரு தூண்டுதலாக அமைந்தது.
அதாவது நூலகங்களை குழந்தைகளின் வீடுகளுக்கே எடுத்து செல்வது எனும் மாவட்ட நூலக கவுன்சிலின் "Books at Doorstep" எனும் இந்த புது முயற்சி நல்லதொரு நோக்கின் இலக்கை எட்டிவருகிறது.
நூலக அதிகாரிகள் பெரும்பாலும் வார இறுதி நாட்களில் 50-100 புத்தகங்களைக் வீடுகளுக்கு எடுத்து செல்கிறார்கள். வழக்கமாக குழந்தைகளின் இலக்கிய தலைப்புகளை கொண்ட புத்தகங்களையும் கல்வி சார் புத்தகங்களை தேவைக்கேற்ப அவர்கள் வழங்குகிறார்கள். உற்சாகம் என்னவென்றால் இவர்கள் ஒரு வீட்டிற்குச் செல்லும்போது பக்கத்து வீட்டுக்காரர்களும் புத்தகங்களை கோரி அணுகிவருகிறார்கள்.
அம்மாவட்ட நூலக சபையின் கீழ் 500 நூலகங்களில் இருந்து புத்தகங்களை சுமார் 25,000 குடும்பங்களை சென்றடையும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு நான்கு புத்தகங்களைக் கொடுப்பதன் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்களை கடன் வழங்குவதும், ஒவ்வொரு நூலக வரம்பிலும் குறைந்தது 50 வீடுகளை உள்ளடக்குவதும் இதன் யோசனையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடுகளுக்கு விரையும் புத்தக சேவைத்திட்டத்தின் வரவேற்பை பொருத்து ஆண்டுக்கு 12 லட்சம் புத்தகங்களை கடனாக வழங்குவோம் என எதிர்ப்பார்ப்பதாக எர்ணாகுளம் மாவட்ட நூலக கவுன்சிலின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தொடர்ந்து பதினைந்து நாட்களில் சேகரிக்கப்படும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இத்திட்டம் பயனுள்ளதாக இருந்தால் மாநிலம் முழுவதும் இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் என மாநில நூலக சபை தலைவர் கூறியுள்ளார்.
இதோடு நின்றுவிடாமல் வாசிப்பின் விரிவை அதிகப்படுத்த சிறு பரிசுப்போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் தாங்கள் படித்த புத்தகங்களில் ஒரு பக்கத்தை எழுதும்படி கேட்கப்படுகிறார்கள், அதே சமயம் ஐந்தாம் வகுப்பு முதல் பத்து வரை உள்ளவர்கள் ஒரு புத்தகத்தின் மதிப்பாய்வை சமர்ப்பிக்கலாம். வெற்றியாளர்களுக்கு சிறிய பரிசுகள் வழங்கப்படும்.