ஒருமுறை மட்டும் உபயோகமாகும் பிளாஸ்டிக் பொருட்ளின் பயன்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், வெட்டுக்கருவிகள், நீர் உறிஞ்சிகள், பலூன் குச்சிகள்,காது அசுத்தம் நீக்கிகள், குவளைகள், மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீனால் செய்யப்பட்ட உணவு மற்றும் பானக் கொள்கலன்கள் ஆக்சோ-சிதைக்கக்கூடிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட அனைத்து தயாரிப்புக்களுக்கும் விதிக்கப்பட்ட தடை நடைமுறைக்கு வருவதாக; ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல், பெருங்கடல்கள் மற்றும் மீன்வளத்துறை ஆணையர் வர்ஜினிஜஸ் சிங்கெவிசியஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மே 31 அன்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தால் இது தொடர்பான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து ஜூலை 3 ஆம் தேதிக்குள், மலிவு விலையில் இனி ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் ஒற்றைப்பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதில்லை என்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல் மீன்பிடி உபகரணம்; ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள், போத்தல்கள், பானம் மற்றும் உடனடி நுகர்வுக்கான உணவுப் பாத்திரங்கள், பாக்கெட்டுகள் மற்றும் ரேப்பர்கள், புகையிலை வடிகட்டிகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் ஈரமான துடைப்பான்கள் போன்ற பிற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தம் நாட்டு கடற்கரையோரங்களில் நிறையும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கையை குறைத்து கையாள்வதற்காக இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன