பாடல் வெளியாகி மிகப்பிரபலமாகி மாதங்கள் கடந்துவிட்டது. இப்போதுதான் விளம்பர காணொளி பற்றி "எண்ணமே ஏன்......வருதா..! என்று எண்ணாதீர்கள்.
Sai Abhyankkar உருவாக்கிய 'கட்சி சேர' பாடலுக்கு முன்பே வெளியான பாடலின் விளம்பர காணொளியை அப்போது யாரும் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. பாடல் வெற்றியடைந்து பரபரப்பானபின் பாடல் சம்பந்தமான ஏனைய காணொளிகளும் இப்போது டிரெண்டிங் ஆகியதையடுத்து இந்த விளம்பர காணொளியும் வலையில் சிக்கி பார்வையாளர்களை அள்ளுகிறது.
காணொளி காட்சிபடுத்தலில்; அருகிவரும் பழைய கிராமபோன் பெட்டி; இசைத்தட்டு கடையும் அங்கே சலனமின்றி உறைக்குள் உறையும் இசைத்தட்டிலிருந்து வெளியாகும் பழைய இசையே சாய் அபயங்கரை உணர்வுப்பூர்வமாக ஊக்கமூட்டி உயரவைப்பதாக காட்டப்படும். அதுவே அவரை இப்போது உயரத்திற்கு உந்தித் தள்ளுகிறது.
பாடல் ஒன்றை உருவாக்குவதற்கும் படைப்பு ஒன்றை உருவாக்குவதற்கும் நாம் ஆக்கப்பூர்வ திறனை பயன்படுத்தவேண்டும் என்பது பொதுவாக சொல்லப்பட்டாலும் முற்றிலும் யாருமே உருவாக்கியிருக்காத ஒன்றை நம்மால் படைத்துவிட முடியாது என்கிறது "Steal Like an Artist" புத்தகம்.
"ஒரு கலைஞரைப் போல திருடுங்கள்" எனும் இந்த புத்தகத்தை எழுதிய ஆஸ்டின் கிளியோன் (Austin Kleon) தனது ஆக்கபூர்வ சிந்தனையால் எளிதில் வாசிப்போர் மனதை திருடிவிடுகிறார்.
ஒருவரின் படைப்பை திருடியோ; அதை குறைத்தோ அல்லது பிளவுபடுத்தியோ உங்களின் படைப்பை உருவாக்குங்கள் என்பதை அர்த்தப்படுத்தவில்லை; மாறாக ஒருவரின் படைப்பை ஆராயுங்கள், மதிப்பளியுங்கள், சேர்கலவையாக, அதனுடன் இணைத்து உருமாற்றுங்கள். கிரியேட்டிவ் பணி என்பது முன்பு வந்ததைதான் உருவாக்குகிறது, இதனால் முற்றிலும் எதுவும் அசல் இல்லை என்பதைதான் இந்த புத்தகம் கூறுகிறது.
கலாச்சார புத்தக வடிவங்களிலிருந்து மாறுபட்ட அளவிலும்; பக்க அமைப்பிலும் வித்தியாசமாக இந்த புத்தகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பல்வேறு புத்தகங்கள் கூறியிருக்கும் விடயங்களை ஆராய்ந்து அதிலிருந்து திரட்டி விளங்கக்கூடிய ஆங்கிலத்தில் படைப்பாற்றல் பற்றி யாரும் உங்களிடம் சொல்லாத 10 விஷயங்களை இதில் தொகுத்துள்ளார் ஆஸ்டின்.
அவரின் தொடர் புத்தக வரிசையில் இது இரண்டாவது பதிப்பு. கிரியேட்டிவ் காட்சி தொடர்பாடல் சம்பந்தமான துறையில் இருப்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் புத்தகமாக "Steal Like an Artist" இருக்கிறது. ஆனால் பொதுவாக எல்லாத்துறையினருக்கும் பரிமாறப்படும் சுவை மிக்கது.
“முதிர்ச்சியற்ற கவிஞர்கள் பின்பற்றுகிறார்கள்; முதிர்ந்த கவிஞர்கள் திருடுகிறார்கள்; மோசமான கவிஞர்கள் தாங்கள் எடுத்துக்கொள்வதை சிதைக்கிறார்கள், நல்ல கவிஞர்கள் அதை சிறந்ததாக அல்லது குறைந்தபட்சம் வித்தியாசமாக மாற்றுகிறார்கள். நல்ல கவிஞன் தன் திருட்டை ஒரு முழு உணர்வாகப் உருக்குகிறான், அது முற்றிலும் பிளவுப்பட்டதிலிருந்து வேறுபட்டது."
20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நவீனத்துவ ஆங்கில மொழி கவிஞர்களில் ஒருவரான T. S. Eliot என்பவரின் கவிதையோடு புத்தகம் ஆரம்பமாகிறது.