யாழ்ப்பாணத்திலிருந்து சொல்லிசைப் பாடல்கள் வரும்போதெல்லாம், இப்படியொரு முயற்சி நடைபெறாதா ? என எண்ணியதுண்டு.
யாழ்ப்பாணத்தின் 2K FOLKS குழு, அந்த முயற்சியை சிறப்பாக முன்னெடுத்ததில், நாடறிந்த நற்புலவரான நவாலியூர் சோமசுந்தர புலவர் (1876-1953) பாடிய " பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்" எனும் நன்கு அறியப்பட்ட நாட்டுப்புறப் பாடல், புதிய சொல்லிசைப்பாடலாக வந்திருக்கிறது.
இந்த நாட்டார் பாடல், பேராசை மற்றும் இழப்பு குறித்த வலுவான செய்தியை எளிமையான, அழகான தமிழ் வரிகளுக்கான நயத்துடன் சொல்கிறது. பால் விற்றுச் செல்வம் அடைய வேண்டும் என்று கனவு காணும் ஒரு பெண்ணின் பேராசை கனவின் கதையை இப்பாடல் விவரிக்கிறது.
பருத்தித்துறையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான தெருமூடி மடத்தின் முன்னால் நின்றும், இருந்தும் பாடப்பெறும் இப்பாடலின் ஒலிவீச்சும், சொல்நயமும், மிக எளிதாகக் கேட்போரிடத்தில் பதிந்துவிடுகிறது.
இலங்கையின் முக்கிய தமிழ் இயக்குனர்களில் ஒருவரான ஞானதாஸ் அவர்களின் நெறியாள்கையில் பல இளையவர்களின் கூட்டுழைப்பாக, புதிய தொனியில் " பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்" .
- 4தமிழ்மிடியாவிற்காக: மலைநாடான்