தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலகளவில் பெருக்கும் நோக்கத்துடன உருவான மஜ்ஜா (maajja) இசைத்தளத்தின் முதலாவது பாடல் "என்ஜோய், எஞ்சாமி... " இன்று வெளியாகியுள்ளது.
திறமையான சுற்றுச்சூழல் அமைப்பினுள் வளங்களை ஆதரிப்பதற்கும், பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், கலைஞர்களுக்குள் நேரடியான தொடர்பாடலுக்கு உதவவும் உருவான இந்த அமைப்பின் கட்டமைப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பிரபல பாடகி (M.I.A) மாயா அருட்பிரகாசம், முதலானோர் பங்குகொள்கின்றார்கள்.
மஜ்ஜா (maajja) வின் முதல் பாடலான "Enjoy, எஞ்சாமி... !" இன்று வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனின் இசைக் கோப்பில், தீ, அறிவு, ஆகியோர் பாடியுள்ளார்கள். மண்ணின் மீதானநேசமும், இயற்கையின் மீதான காதலும் பேசும் பாடல் வரிகளும், காட்சிகளும், அருமையாக விரிகின்றன.
உலகமயமாகி வரும் கலைத்துவங்களோடு கைகோர்க்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியதே. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நமது பாரம்பரிய வரிகளையும், வாழ்க்கையையும், புதிய பாணியிலான காட்சிப்படுத்தல்களோடு சேர்க்கையில், எழக் கூடிய அந்நியத் தன்மை குறித்து அவதானம் கொள்ளுதல் அவசியம் எனக் கருத வேண்டியிருக்கிறது. இல்லையெனில் உலகமயமதல் எனும் பேரலைக்குள் நமக்கான தனித்துவங்கள் சிக்கிச் சின்னாபின்னமாகிவிடும் பேரபாயமும் உள்ளது என்பதையும், கவனத்திற் கொள்ள வேண்டும்.
நமது பண்டைய கிராமிய வாழ்வின் வரிகளாக வரும் பாடலின் வரிகளை, தளத்தில் தங்கிலீஸில் பதிவு செய்திருப்பது, பிறமொழியாளருக்கு வரிகளை அறிந்து கொள்ள உதவும் என்பது உண்மைதான். ஆனால் பாடல் வரிகளின் தாய் மொழியில் அதனை பகிர்ந்து கொள்ளாது விடுவது உறுத்தலாக இருக்கிறது. இசையினை உலகத் தளத்தில் உயர்ந்த நினைக்கும் இவர்களைப் போலவே பலரது உழைப்பின் பயனிலேயே, இன்று இணையத்தில் தமிழ் எழுதப்படுகிறது. அதற்கான வாய்ப்பிருந்தும், அதனை நாம் கண்டுகொள்ளாதோ அன்றி தவிர்த்து விடுவதோ நமது நல்ல நோக்கங்களை சிதறடித்துவிடும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
மற்றும்படி "Enjoy, எஞ்சாமி... !" தமிழ் மண்ணின் மணம் மணக்கும் பாடல் என்பதில் மாற்றில்லை.
Artist: Dhee ft. Arivu
Producer: Santhosh Narayanan
Director: Amith Krishnan (Studio MOCA)
Produced by: maajja