free website hit counter

வளம் பெருகும் வைகாசி விசாகம் !

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய நாளில் விசாக நட்சத்திரமும் கூடி வர வைகாசி விசாகம் எனச் சிறப்புப் பெறும்.

விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகும். சரவணப் பொய்கையில் ஆறு பொறிகளாக முருகப்பெருமான் இந்த விசாக நட்சத்திரத்தில் அவதரித்ததால் முருகனுக் கு விசாகன் என்று பெயர். வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்று பொருள்படும்.

வைகாசி விசாகம் தொடர்பிலான மற்றுமொரு புராணக்கதையில், பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.

ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார்.

மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.

ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது 'நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது.

சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த திருநாளில் திருச்செந்தூர் கோயில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை அதில் இடுகின்றனர். முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவு படுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

வைகாசி விசாகத் திருநாளில் வில்வித்தகனான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்றதும், பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் பிறந்ததும், திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடியதுமான அற்புதங்கள் நிகழ்ந்த நாள். கௌதம சித்தார்த்தன்அவதரித்ததும் ஓர் வைகாசி பௌர்ணமி என்று வரலாறு சொல்கிறது. அவர், கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்று புத்தர் ஆனதும் வைகாசி பௌர்ணமியே.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction