அன்னை சக்தியைப் போற்றி செய்யும் நவ இரவுகள் ஆரம்பமாகியுள்ளன. உலகைக் காக்கும் சக்தியானவள் அனைத்து உயிர்களிடத்தும் அருட்சக்தி வழங்கி எவ்வகையிலும் காத்து நிற்கின்றாள்.
கற்போருக்கு அறிவையும் உழைப்போருக்கு பொருளையும், காப்போருக்கு ஆற்றலையும் இப்படியாக அவரவர் தேவையை அறிந்து சகலகலைகளையும் கற்றுணர அருள்பாலிப்பவள் அன்னை ஆதிபராசக்தி ஆவாள்.
ஆயகலைகள் எனப்படும் அறுபத்தி நான்கு கலைகளை ஏய உணர்விப்பவள் நாம் கற்றுத்தேர்ந்து எம் வாழ்வினை வளம் கொழிக்கச் செய்பவள் தூயவளாகிய அன்னை சக்தி பளிங்குபோல் மிளிர்கின்றவள் அப்படியாகிய அன்னை எமது உள்ளங்களில் இருக்கும் வரை எமக்கு என்றைக்கும் இடர் வாராது. அன்னை ஆதிசக்தி அம்பிகையை இந்தநவராத்திரி நாள் மட்டுமல்லாது எப்போதும் எந்நாளும் அவளை நினைந்து வழிபாடாற்றுவது இக்காலத்திற்கும் எக்காலத்திற்கும் ஏற்புடையதாகும்.
துர்க்கையாக வீரத்தையும்; இலக்குமியாக செல்வத்தையும்; சரஸ்வதியாக அறிவையும் தந்தருள வேண்டுகிறோம். ஒன்பது நாட்களும் முச்சக்திகளையும் வழிபாடாற்றி இம்மூன்றும் இருந்தால் வாழ்க்கையை வெற்றி கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்கிறோம். அறுபத்து நான்கு கலைகளுக்கும் தாயாகிய சகலகலாவல்லியை நினைந்து சகலகலாவல்லி மாலை பாடல் படித்து துதிக்கிறோம். ஆனால் அறுபத்து நான்கு கலைகள் என்னன்ன என்றாவது தெரிந்து வைத்திருக்கிறோமா, அவற்றில் எத்தனை கலைகளை நாம் கற்றுக்கொள்ள நினைக்கிறோம்?
வெறும் கல்வி அறிவு மட்டும் போதாது; வீரமும் வேண்டும். அதோடு விவேகமும் வேண்டும். எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் ஒருகலையைக் கற்றுக்கொள்வதற்கு அறிவு மட்டும் தேவை என்பதில்லை. புதிதாய் ஒன்றை ஒருவர் உருவாக்குகிறார் என்றால் அதை எம் கண்ணால் பார்த்தால் அதை உடன் எம் கையால் செய்யத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். காதால் கேட்டால் அதை நாமும் மனனம் செய்து படிக்க வேண்டும். அதாவது நமக்கும் பிறர்க்கும் உதவக்கூடிய விடயமாகவும் அது அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் அக்கலை பலபயனுள்ளதாய் உலகத்தவர்க்கும் உங்களுக்கும் நன்மையளிக்கும்.
பல நன்மைகளையும் பெருமைகளையும் நற்பெயரையும் கூட கொண்டுவரும். எமக்கு எவ்வளவோ பயன் தரக்கூடியதான அறுபத்து நான்கு கலைகளை உலகமாதாவான அம்பிகை நமக்களித்திருக்கிறாள். நாம் அவற்றில் சில கலைகளையாவது கற்று அதில் முன்னேறவேண்டும்.
அதேவேளை இவ்வாறான கலைகளை கற்றுக்கொள்ளும் மாணவர்கள் சிலர் குடும்ப வருமானம்; போன்ற காரணங்களால் அதிலிருந்து விலகிக்கொள்வதோடு கற்றுத்தேர்ந்த கலையை மறந்துவிடும் நிலைக்கும் செல்கிறார்கள். ஆனால் உடலையும் மனதையும் சோரவிடாது எம்மை காத்து நிற்க இக்கலைகளுக்கு பெரும் பங்குண்டு, அதுவும் உலகின் இவ்வாறான ஒரு அழுத்தமான சூழ்நிலையில் பயின்ற இக்கலைகளிலும் சற்று ஈடுபாடு காட்டினால் மனம் அமைதியாகும். இப்பூமியில் வாழும் எல்லா உயிர்கள் மீதும் நாம் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்தால் எவ்வித கெட்ட சக்திகளும் எமை துன்புறுத்தாது.
கூத்தனூர் நாயகி என் அழைக்கப்படும் கலைவாணி சரஸ்வதி மீது கவிஞர் ஒருவர் பாடுகிறார் பாடல்
அச்சத்தை நெஞ்சத்தின் அப்பாலுக்கப்பாலாய்
அம்மா நீ ஓட்ட வேண்டும் இங்கு
மிச்சத்திலே நிற்கும் வீரத்தில் என்குரல் உன்
மேன்மைகள் பாடவேண்டும் வான
நட்சத்திரம் என்றன் கைகளிலே வீழவேண்டும்
நன்மாலை ஆகவேண்டும். நின்றன்
உச்சத்தின் மகுடமாய் ஒளிவீசக் கூத்தனூர்
உரைகின்ற வாணி அருளே..
இருள்மூண்ட சூழலில் என்னிருகண்பொன்னொளியாய்
இங்கு நீவந்திடாயோ.உன்றன்
விரல் தீண்டும் விணையின் மெல்லிழையின் இன்னொலியில்
மின்னிவரத்தீந்தமிழைத்தா உன்றன்
அருள் வேண்டி நிற்கின்றஆத்ம தவத்திற்கும்
ஆசிகள் தந்திடம்மா.
கொரோனா என்ற கொடியபிணிக்கு மருந்தாய்
வந்தே பாரினைக்காத்திடம்மா.
சக்தி அருளைப் பாடி சங்கடங்களை நீக்கிட முககவசம் அணிந்து சென்று கள்ளமில்லாத வெள்ளையுள்ளம் கொண்ட தூயவளை தூய்மையுடன் வணங்கி நோயற்ற வாழ்வும் அறிவு நிறைந்த வளமும் பெற்று என்றும் சுத்தத்தை பேணி நற்கலைகளைக் கற்று நலமுடன் வாழ்வோம்.
- 4தமிழ்மீடியாவிற்காக அருந்தா