free website hit counter

காரடையான் நோன்பு !

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் நிறைவு பெறும் இந் நோன்பு.

இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.

மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒரு நாள் வேட்டைக்குச் செல்லும் போது தியானத்தில் இருந்த சாளுவ தேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால் காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான் அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி.

மந்திர தேசத்திற்கு வந்த நாரதர் சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும் அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால் சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.

சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் விட்டு பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின் தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும் கணவன் இறப்பான் என்று தெரிந்தும் தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும் பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர் அவளை திரும்பிப் போகச் சொன்னார்.

அவரிடம் நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால் அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும் எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர் அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும் என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்றால் என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள் என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார்.

மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம். மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். இன்று அந்த நன்நாள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction