இன்று சித்திரை மாத ரோஹினி நட்சத்திரம். சைவம் தழைத்தோங்க, சமணர்களின் சமய ஆக்கிரமிப்பினை, அறவழியால் மாற்றியமைத்த மங்கையர்க்கரசியாரின் குருபூஜை தினம்.
சோழ மன்னனுக்கும் பாண்டிய மன்னனுக்கும் போர். போரில் பாண்டிய மன்னன் வென்றான். வெற்றியின் அடையாளமாக மண்ணை அடைய விரும்பாத பாண்டியன், சோழனின் பெண்ணை அடைய விரும்பி, மணம் செய்துதரக் கேட்டான். தோற்றவர்க்கு ஏது மறுக்கும் உரிமை? மேலும், அந்தப் பெண், தன் தந்தையையும் தேசத்தையும் காக்கும்பொருட்டு பாண்டியனை மணக்கச் சம்மதித்தாள். மங்கையர்க்கரசி பாண்டியனை மணந்து மதுரையின் அரசி ஆனாள்.
மங்கையர்க்கரசியை மணந்த பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன். ஒருகாலத்தில் சைவசமயத்தில் இருந்த நெடுமாறன், சமணத் துறவிகளின் உபதேசம் கேட்டு சமண மதத்திற்கு மாறினான். ஒரு நாட்டின் அரசனே மதம் மாறினால், மக்களுக்கும் வேறு வழியில்லை. மதுரையில் சைவ வழிபாடுகள் புகழ் குன்றி ஒடுக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில்தான் மங்கையர்க்கரசி மணமகளாகி மதுரை வந்து சேர்ந்தார்.
எல்லாப் பெண்களுக்கும் நிகழும் நடைமுறைச் சிக்கல் மங்கைக்கும் நிகழ்ந்தது.
பிறந்த வீட்டில், தான் கொண்டாடிய பலவற்றையும் புகுந்த வீட்டில் தியாகம் செய்தாகவேண்டிய நிர்பந்தம். சோழ தேசத்தில் ஈசன் வழிபாட்டில் திளைத்து வளர்ந்தவள் மங்கை. ஆனால், மதுரையோ சமணர் கூடாரம். மன்னன், மங்கையர்க்கரசியை அவள் விரும்பும் ஈசனை வழிபட அனுமதித்தான். ஆனால் அதுவும் ஓரளவுக்குத்தான். திருநீறு அணிந்த நெற்றியோடு அவன் எதிரே யாரும் தோன்றமுடியாது. அப்படியிருக்க மங்கையர்க்கரசி நீறு அணிவது எப்படி?
யாரும் அறியாவண்ணம் தன் நெஞ்சினில் திருநீற்றை அணிந்து மறைத்து வைப்பாள். அவள் மனமெல்லாம், மீண்டும் மதுரையில் சைவத்தைத் தழைத்தோங்கச் செய்யவேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது. அப்போதுதான் வேதாரண்யத்தில் திருஞானசம்பந்தர் இருப்பது அறிந்து, அவரை அழைத்து வந்தால், மதுரையையும் அவள் கணவன் பாண்டியனையும் மீண்டும் சைவத்தை நோக்கி மீட்கலாம் என்று நினைத்தாள். அமைச்சர் குலச்சிறையாரை அனுப்பி ஞானசம்பந்தரை வரவழைத்தாள்.
மதுரையில் இருந்த சமணர்கள், ஞானசம்பந்தரின் மகிமையை அறிந்திருந்ததால், அவர் மன்னனைச் சந்தித்தல் ஆகாது என்று நினைத்தனர். பாண்டியனிடம் சென்று, ``ஞானசம்பந்தன் என்னும் மந்திர தந்திரம் அறிந்த சைவச் சிறுவன் வந்திருக்கிறான், அவன் `கண்டுமுட்டு' " என்றனர். `கண்டுமுட்டு' என்றால் கண்ணால் கண்டாலேயே தீட்டு ஏற்படும் என்று பொருள்.
ஒருமதச் சார்பு பிழையில்லை. ஆனால் அது பிறமத வெறுப்பாக மாறும்போது பெரும்பிழையாகிவிடுகிறது. அப்படித்தான், பாண்டியனும், `கேட்டுமுட்டு' என்றான். அதாவது, அந்தச் செய்தியைக் காதினால் கேட்டதனாலேயே தனக்குத் தீட்டு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லிப் பெரும்பிழை புரிந்தான். சமணர்கள் கூடி ஞானசம்பந்தர் இருந்த இடத்தைத் தீயிட்டு அழிக்க முயன்றதை அறிந்தும் பாண்டியன் மறுப்பு சொல்லாமல் இருந்தான்.
ஆனால், தீ ஞானசம்பந்தரை எரிக்கவில்லை. ஞானசம்பந்தரோ, மதுரைக்கு இறைவன் தன்னை வரவழைத்த திருவுளத்தினை அறிந்திருந்ததால், தன்னை அழிக்க வந்த தீயினை தன் பகைவர்கள் மேல் ஏவினார். அதுவும் `அமணர் கொளுவுஞ்சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே' என்று பாடினார். ஞானசம்பந்தர் சொன்னதுபோலவே, தீ உடனே கொல்லும் தீவிரம் இன்றி மெல்லச் சென்று பாண்டியனை வெப்பமாகப் பற்றியது. பாண்டியனுக்கு வெப்பு நோய் பெருகிற்று.
மங்கையர்க்கரசியின் தவிப்பு அதிகமானது. மன்னனும் மக்களும் சைவம் நோக்கித் திரும்ப வேண்டும் என்று நினைத்தாள். ஆனால், தற்போது தன் கணவனின் உயிரே கேள்விக்குறியானது கண்டு வருந்தினாள். சமணர்கள் கூடி, தங்களால் இயன்ற அத்தனை மந்திரங்களையும் சொல்லி முயற்சி செய்தனர். ஆனால், குணம் ஏற்படாமல் அதிகமானது. அப்போது, மங்கையர்க்கரசி, வழிகாட்டும் குருவாக மாறி ஞானசம்பந்தரைச் சரணடைய வழிகாட்டினாள். மன்னனும் ஏற்றுக்கொண்டான்.
மதுரை மக்களுக்கும், மன்னனுக்கும், இந்த உலகத்துக்கும் திருநீற்றின் பெருமையை உணர்த்த விரும்பிய சம்பந்தர், `மந்திரமாவது நீறு' என்று பதிகம்பாடி திருநீற்றின் மூலம் மன்னனின் நோயினை நீக்கினார். சமணர்கள் இதைக் கண்டு பொறுக்காமல், சம்பந்தரை, `அனல்வாதம்', `புனல்வாதம்' செய்ய அழைத்தனர். அதிலும் சம்பந்தரே வென்றார். மன்னன் சிவன் வசமானான். மதுரை சைவத்தின் வசமானது.
'தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்' என்பது வள்ளுவம்.
மங்கையர்க்கரசி நாயனார் தன் சிவபக்தியையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காத்து, தான் மதிக்கும் சிவ நாமத்தையும் காத்து பெரும்புகழைப் பெற்ற பெண். அதனால்தான் நாயன்மார்களுள், ஆர் விகுதிபெற்று, மங்கையர்கரசியார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
வளவர்கோன் பாவை எனும், மங்கையற்கரசி நாயனாரை நினைந்து போற்றுவோம்.