சிவபெருமானது அறுபத்தி நான்கு திருவிளையாடல்களில் இரு திருவிளையாடல்கள் நிகழ்ந்த நாள், ஆவணிமூலம்.
வைகை ஆற்றின் அணை அடைப்பதற்காக, மூதாட்டி செம்மணச் செல்வியின் பிட்டுக் கூலிக்காக, பெருமானார் மண் சுமந்த திருவிளையாடலும், மாணிக்கவாசக சுவாமிகளுக்காக, நரியைப் பரியாக்கிய திருவிளையாடலும் நிகழ்ந்த நாளாக ஆவணிமூலம் சொல்லப்படுகிறது. இந்தத் திருவிளையாடல்களில் சொல்லப்பட்ட கதைகளை காலங்காலமாக புராணக் கதைகளாக நாம் படித்து வருகின்றோம்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நட்சத்திரமும் சிறப்பு பெறும். அப்படி ஆவணி மாதத்தில் சிறப்பு பெறும் நட்சத்திரம் மூல நட்சத்திரமாகும். அனைத்து மாதத்திலும் மூல நட்சத்திரம் வரும் என்றாலும் ஆவணி மாதத்தில் வரும் மூல நட்சத்திரம் மிகவும் சிறப்புப் பெறுவதற்கான காரணம், இறைவனின் இந்தத் திருவிளையாட ல்கள் நடந்ததால் தான் என்று சொல்லிக் கடந்துவிடமால், அதன் உட்பொருள் உணர்ந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.
ஆவணி மாத மூல நட்சத்திரம் சீதோஷ்ணநிலையை நிர்ணயிக்கத்தக்க நாளெனவும் சொல்லப்படுகிறது. அன்று காலையில் சூரிய உதயத்தின் போது இருக்கும் சீதோஷண நிலையை வைத்து, ஆண்டு முழுவதும் சீதோஷண நிலை எப்படி இருக்கும் என கணிக்கும் பழக்கமுண்டு.
இந்தப் பழக்கத்துடன், இந்நாளில் நடந்த இரு திருவிளையாடல்களையும் இணைத்துப் பார்த்தால், இயற்கையைப் பேணுதல் குறித்த எண்ணச்சிந்தனைகளை அவை உட்பொருளாகக் கொண்டிருப்பதைக் காணலாம். இறைவனாக இருப்பினும், இயற்கைச் சமநிலையை மாற்றிட முடியாது என்பதை இத்திருவிளையாடல்களின் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
கல்வித் தெய்வமாக நாம் போற்றும் சரஸ்வதிக்குரிய நட்சத்திரம் மூலம். ஆனால் வாழ்வியலுக்குப் படிப்பிருந்தால் மட்டும் போதுமா? அதைச் சிரயான வழியில் பயன்படுத்தும் ஞானம் தேவையல்லவா. அந்த ஞாத்தினைத் தரக்கூடிய கிரகமான கேதுவுக்கான நட்சத்திரம் மூலம். அறிவு, தைரியம், அபாரமான சக்தி கொண்ட ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரம் மூலம். இவை எல்லாவற்றினையும் உற்று நோக்கின், நம் அறிவின்வழி நின்று, அறத்தின் வழி நின்று, அகிலத்தைப் பாதுகாக்க, இயற்கையைப் பேணவேண்டும். அதன் சமநிலையைக் குலைக்காது காக்க வேண்டும் எனும் பேருண்மை புரியும்.
ஆதலால் ஆவணி மூல நன்நாளில், இயற்கையே இறை எனும் பேருண்மையைப் புரிந்து, இயற்கைப்போற்றி இறையருளைக் கொண்டாடுவோம்.