free website hit counter

கார்த்திகைச் சோமவாரமும், சோமநாதர் மகிழும் சங்காபிஷேகமும் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிவபெருமானை எல்லாக் காலங்களிலும் வழிபடலாம்.  ஆயினும் சில கிழமைகளில், சில காலங்களில் வழிபடுவது மிகச் சிறப்பு வாய்ந்தது. அவ்வாறான சிறப்பு வாய்ந்த ஒரு நாள் திங்கட் கிழமையாகும்.

சோமவார தரிசனம், சோமவார விரதம், சோமவார பிரதோஷம்  என்பன மிகவும் சிறப்பு வாய்ந்தது. தீபங்களின் மாதம் கார்த்திகை என்பார்கள். ஜோதி வடிவான சிவனை, தீபங்களின் மாதமான கார்த்திகைச்  சோமவாரத்தில் வழிபடுவது அனைத்து விதமான பாவங்களையும் நீக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.

சிவ பெருமான்  அபிஷேக பிரியர் அதனால் சிவனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் என குளிர்ச்சி தரும் 16 விதமான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது பொதுவானதாகும்.கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரமான திங்கட்கிழமையில், சிவனுக்கு சங்காபிஷேகம் மிகவும்  உகந்ததாகக் கருதப்படுகிறது.சிவனுக்குசெய்யப்படும் அபிஷேகங்களில் மிகவும் உயர்வானதாகக் கருதப்படுவது சங்காபிஷேகம். சங்கினால்  அபிஷேகம் செய்வதோ, சங்காபிஷேகத்தை வேறு யாராவது செய்வதை நாம் தரிசிப்பதோ அளவிடமுடியாத நற்பலன்களைத் தருவதாகும்.

சாபத்தால் தன்னுடைய 64 கலைகளை ஒவ்வொன்றாக இழந்து, அழகிழந்து  துன்பப்பட்ட சந்திரன், தன்னுடைய சாபம் நீங்குவதற்காக சிவ பெருமானை நோக்கி, கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்து சிவ பூஜை செய்தான். சந்திரனின் தவம் மற்றும் பூஜையால் மனம் மகிழ்ந்த ஈசன், சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்ததுடன், பிறை சந்திரனை தனது தலையில் சூடினார். இதனால் சிவபெருமானுக்கு சந்திரசேகரன், சந்திரகமெளலீஸ்வரர் எனும் நாமங்களும், சந்திரனுக்கு சோமன் எனும் பெயருள்ளதால் அவனை ஆட்கொண்ட இறைவனுக்கு சோமநாதர் எனவும் பெயருண்டு.

கார்த்திகை சோமவாரத்தில் சிவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் சந்திர பலம் கிடைக்கும். நவக்கிரஹக நாயகர்களில் ஒருவரான சந்திரன் நம் மனோபலத்துக்குக் காரணமானவர். இதனால் சோமவாரத்தில் சிவனை வழிபடுவோர்க்கு மனோபலம், மனத்தெளிவு என்பன கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாள் , சிவனுக்கு உகந்த சோமவாரத்தில் தொடங்குகின்றது. இதேநாளில் சபரிமலை சாஸ்தா ஶ்ரீ ஹரிகர புத்திரனின் மகர மண்டல விரதமும் ஆரம்பமாகிறது மேலும் சிறப்பினைத் தருகிறது. இந்நாளில், சிவனை, ஐயப்பனை, வணங்கி, வழிபாடியற்றிப் பலன்பெறுவோம்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula