free website hit counter

Sidebar

27
வி, மார்
44 New Articles

மாதவத்தின் மகா தேவம் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் ஒரு ஒரு வேதசிவாகம ஆசிரியனுக்குரிய அத்தனை பண்பு நலன்களும் கொண்டு திகழ்ந்தவர் பேராசான் இணுவையூர்  சிவஸ்ரீ மகாதேவ வாத்யார்.

கற்பதிலும், கற்பிப்பதிலும், புதியவைகளைத் தேடுவதிலும், தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பதிலும்,  எண்பத்தைந்து வயது தாண்டி, தன் இறுதிக்காலங்கள் வரை தயாளனாகவும், தாராளமானவராகவும் திகழ்ந்தவர். 

போரும் இடப்பெயர்வும் அழிவும் மரணமும் நிரம்பிய மண்ணில் சுமார் அறுபது ஆண்டு காலம் தொடர்ச்சியாக பரோபகாரமாக,  இலவசமாக வேத சிவாகம குருகுலத்தை  நடாத்தியவர். ஆனால், அதற்கான பெரிய அங்கீகாரங்களை அரச தரப்பு அமைப்புக்களோ, கல்விப் பெருஞ்சமூகங்களோ வழங்கவில்லை. வேத சிவாகம கற்கையை கலை என்று அங்கீகரிக்காததால் அரச அமைப்பு சார் கௌரவங்கள் கிடைத்தில்லை. அதற்காக அவர் கவலைப்பட்டதும் இல்லை. 

அதேபோல் அவரது அரைநூற்றாண்டுக்கும் மேலான சமூக, சமயப் பணியை வலுச்சேர்க்கும் உறுதியான ஆவண சேமிப்பும் அவரிடம் இல்லை. எனினும் உலகே அவர் பணியின் பயன் அறியும். இதற்கு முன்னும் எத்தனையோ பேர் இருந்திருப்பர். இனியும் வரலாம். ஆனால் இவர் போல் ஒருவர் எங்கே தேடலாம்?

தருமை ஆதீனம், சிவபுரம் பாடசாலை  போன்ற தமிழக ஆன்மீக அமைப்புக்களின் கௌரவம் அண்மைய ஆண்டுகளில் அவருக்கு கிடைத்திருந்தது. காஞ்சி காமகோடி பீடாதீஸ்வரர் சங்கராச்சார்யார் அவருக்கான கௌரவிப்பில் இணைய வழியில் நேரே இணைந்து ஆசி வழங்கியமையும் வாத்யாருக்கு மகிழ்ச்சி தந்திருந்தது. ஆனாலும் பல்கலைக்கழகம் கொண்டாட வேண்டிய ஒரு மாமேதை அவர் என்பதில் எனக்கு ஐயமே இல்லை. இனியேனும் அவருக்கு எமது பல்கலைக்கழகம் உயர் கௌரவ பட்டமளிப்பது குறித்து ஆலோசிக்கலாம். காலம் கடந்தது என்றாலும் சிவாச்சார்ய சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணிக்கான  கௌரவமாக அது இருக்கும்.

அவருடைய வேத - ஆகம - சாஸ்த்ர- சம்ஸ்க்ருத புலமைக்கு அப்பால் அவர் பெரிய கலாரசிகர். 
இசை- நடனம்- சிற்பம்- சமையல் எல்லாவற்றையும் அவர் இரசிப்பார். அதிலும் ஊக்குவிப்பார்.
அத்தகைய மகானின் இழப்பு என்பது, இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்லாது ஆன்மீக உலகுக்கான பேரிழப்பாகும். 

ஆன்மீக மரபின் மாதவத்தில் மலர்ந்து மறைந்த மகாதேவர் மலரடிகளைப் பணிகின்றோம் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula