வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்டிருப்பதற்கு சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில்,
இலங்கைத் தீவில் தமிழர் தொன்மையை சிதைக்கும் வகையிலும், சைவமக்களின் சமய நம்பிக்கையை இழிவு செய்யும் வகையிலும், வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தில் சைவமக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட வழிபாடுகள், தொல்பொருள் திணைக்களத்தினால் "தொல்பொருள் பாதுகாப்பு" என்னும் வகையில், தடைசெய்யப்பட்டு, பாதுகாப்புவலயமாக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அழிப்பு நடைபெற்றிருக்கிறது. இதன் காரணமாக, இந்த அழிப்பினை உள்நோக்கமும் , இனத்துவேசமும் மேலோங்கிய செயலாக கருதவேண்டியுள்ளது. இது இலங்கையிலும், புலம்பெயர்நாடுகளிலும் உள்ள சைவப்பெருமக்களின் மனதில் பெரும் வருத்தத்தினையும், மீண்டும் அரசின் மீதான அவநம்பிக்கையினையும் தோற்றுவித்துள்ளது.
நாட்டில் சகல இனமக்களுக்குமான சமய வழிபாட்டுச் சுதந்திரம் சமமாக மதிக்கப்பட வேண்டியவிடத்து, இவ்வாறான அழிப்புக்கள் தொடர்வது, மக்களிடையே மனக்கசப்புக்களை வளர்த்து, அமைதிநிலையைக் குழப்ப முனையும் செயலாகும். இவ்வாறான செயல்கள் அனைத்துச் சமூகங்களிடமும் பரஸ்பரம் வளர்த்தெடுக்கப்படவேண்டிய நம்பிக்கையினைக் கலைத்துவிடக் கூடிய செயலாகும்.
இத்தகைய பொதுநம்பிக்கையையும், சைவமக்களின் சமய நம்பிக்கையையும் சீர்குலைக்க முனைந்த இந்த ஆலய அழிப்பு நடவடிக்கையினை சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் வண்மையாகக் கண்டிப்பதுடன், இலங்கைத் தொல் பொருள் திணைக்களமும், அரசாங்கமும், இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு ஆவண செய்யவேண்டும் எனவும், இனிவரும் காலத்தில் இவ்வாறான அழிப்புக்கள் நாட்டின் எப்பகுதியிலும் தொடராத பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும், வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் மக்களின் வழிபாட்டுச் சுதந்திரம் பேணப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் வலியுறுத்துகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் ஆங்கிலம் மற்றும் ஜேர்மன் மொழியிலான பிரதிகள், சுவிஸ், மற்றும் இந்தியத் தூதுவராலயங்களுக்கும், மனித உரிமைகள் அமைப்பிற்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.